பாடல் #1406: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
மண்ணி லெழுந்த வகார வுகாரங்கள்
விண்ணி லெழுந்து சிவாய நமவென்று
தண்ணி லெழுந்தது காண்பரி தென்றுதான்
கண்ணி லெழுந்தது காட்சிதர வென்றே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மணணி லெழுநத வகார வுகாரஙகள
விணணி லெழுநது சிவாய நமவெனறு
தணணி லெழுநதது காணபரி தெனறுதான
கணணி லெழுநதது காட்சிதர வெனறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மண்ணில் எழுந்த அகார உகாரங்கள்
விண்ணில் எழுந்து சிவாய நம என்று
தண்ணில் எழுந்தது காண்பு அரிது என்று தான்
கண்ணில் எழுந்தது காட்சி தர என்றே.
பதப்பொருள்:
மண்ணில் (சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து) எழுந்த (எழுந்து இருக்கும் ஜோதியே) அகார (ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும்) உகாரங்கள் (காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது)
விண்ணில் (அதுவே ஆகாயத்தில்) எழுந்து (எழுந்து வீற்றிருக்கும் போது) சிவாய (இறைவனாகவே ‘சிவாய’ என்று அழைத்து) நம (‘நம’ என்று வணங்குவதற்கு) என்று (என்றும்)
தண்ணில் (கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும்) எழுந்தது (எழுந்து இருக்கின்றது) காண்பு (இந்த ஜோதியை உருவமாக பாரப்பது) அரிது (இயலாது) என்று (என்ற காரணத்தால்) தான் (உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது)
கண்ணில் (சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே) எழுந்தது (எழுந்து வந்து) காட்சி (அருள் காட்சியை) தர (அருளவும்) என்றே (காரணமாக இருக்கின்றது).
விளக்கம்:
பாடல் #1405 இல் உள்ளபடி சாதகருக்குள்ளிருந்து வெளிவந்து உலகம் முழுவதும் பரந்து எழுந்து இருக்கும் ஜோதியே ஓங்கார தத்துவத்தில் படைக்கும் தொழில் புரியும் அகாரமாகவும் காக்கும் தொழில் புரியும் உகாரமாகவும் செயல் படுகின்றது. அதுவே ஆகாயத்தில் எழுந்து வீற்றிருக்கும் போது இறைவனாகவே ‘சிவாயநம’ என்று வணங்குபவர்களுக்கு கிடைப்பதற்கு அரியதான அமைதியை அருளுகின்றதாகவும் இருக்கின்றது. இந்த ஜோதியை உருவமாக பார்ப்பது இயலாது என்ற காரணத்தால் உயிர்கள் தனக்குள் இறைவனாகவே வைத்து வணங்கும் போது சாதகரின் ஜோதியானது அவர்களின் ஆன்மாவிற்குள்ளேயே எழுந்து வந்து அருள் காட்சியை அருளவும் காரணமாக இருக்கின்றது.
உட்கருத்து:
இறை நிலையில் வீற்றிருக்கும் சாகதருக்குள் இருக்கும் ஜோதியானது உலகம் முழுவதும் இருக்கின்ற உயிர்களுக்குள் சென்று மாயை நீங்கி இறைவனை அடைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே படைத்தல் தொழிலாகும். அவ்வாறு எண்ணிக் கொண்டு வணங்கும் உயிர்கள் மீண்டும் மாயையில் சிக்கிக் கொள்ளாமல் காத்து அருளுவதே காத்தல் தொழிலாகும். இந்த இரண்டு தொழில்களையும் இறை நிலையில் இருந்து சாதகர் செய்வதால் அவரது ஜோதியை இறைவனாகவே வணங்கும் உயிர்களுக்கும் ஜோதி தரிசனத்தையும் கிடைப்பதற்கு அரியதான அமைதியையும் வழங்கும் நிலையில் இருக்கின்றார்.