பாடல் #1403: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
நன்மணி சூலங் கபாலங் கிளியுடன்
பன்மணி நாகமழுக் கத்தி பந்தாகுங்
கன்மணி தாமரை கையிற் றமருகம்
பொன்மணி பூணாரம் பூசனை யானதே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நனமணி சூலங கபாலங கிளியுடன
பனமணி நாகமழுக கததி பநதாகுங
கனமணி தாமரை கையிற றமருகம
பொனமணி பூணாரம பூசனை யானதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நல் மணி சூலம் கபாலம் கிளியுடன்
பல் மணி நாகம் மழு கத்தி பந்து ஆகும்
கல் மணி தாமரை கையில் தமருகம்
பொன் மணி பூண் ஆரம் பூசனை ஆனதே.
பதப்பொருள்:
நல் (நன்மையை அருளும் இறைவியின் திருக்கரங்களில் தூய்மையான) மணி (ரத்தின மணிகளை பதித்த) சூலம் (திரிசூலமும்) கபாலம் (மண்டையோடும்) கிளியுடன் (கிளியும்)
பல் (பலவிதமான) மணி (ரத்தின மணிகளை பதித்த) நாகம் (நாகமும்) மழு (கோடரியும்) கத்தி (கத்தியும்) பந்து (பந்தும்) ஆகும் (ஆயுதமாகவும்)
கல் (கல்லில்) மணி (ரத்தின மணிகளை பதித்த) தாமரை (தாமரை மலரும்) கையில் (தாங்கி இருக்கின்ற திருக்கரங்களில்) தமருகம் (தமருகமும்)
பொன் (தங்கத்தில்) மணி (ரத்தின மணிகளால்) பூண் (சேர்த்துப் பூட்டிய) ஆரம் (மாலையும்) பூசனை (ஆகிய பொருட்கள் அனைத்துமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத்) ஆனதே (தகுந்தது ஆகும்).
விளக்கம்:
பாடல் #1402 இல் உள்ளபடி நன்மையை அருளும் இறைவியின் பத்து திருக்கரங்களில் தூய்மையான ரத்தின மணிகளை பதித்த 1. திரிசூலமும் 2. மண்டையோடும் 3. கிளியும் 4. பலவிதமான ரத்தின மணிகளை பதித்த நாகமும் 5. கோடரியும் 6. கத்தியும் 7. பந்தும் ஆயுதமாகவும் 8. கல்லில் ரத்தின மணிகளை பதித்த தாமரை மலரும் 9. தமருகமும் 10. தங்கத்தில் ரத்தின மணிகளால் சேர்த்துப் பூட்டிய மாலையும் வைத்து இருக்கின்றாள். இப்படி இறைவியின் திருக்கரங்களில் இருக்கும் பத்து பொருட்களுமே இறைவிக்கு சரிசமமாக பூஜிக்கத் தகுந்தது ஆகும்.
குறிப்பு:
முருகனின் வேலை வணங்குவது முருகப் பெருமானை வணங்குவதற்கு சமமாகக் கொள்ளப் படுவது போலவே இங்கே இறைவியின் திருக்கரங்களில் இருக்கின்ற பத்து பொருளையும் வணங்குதல் இறைவியை வணங்குவதற்கு சமமாகக் கொள்ளப் படுகிறது.