பாடல் #1401: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
நின்றவள் சத்தி நிறந்தரம் மாகவே
கண்டிடு மேரு வணுவாதி தானாதிப்
பண்டைய வாநின் பகட்டை யறுத்திட
வொன்றிய தீபமுணர்ந் தாற்குண் டாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நினறவள சததி நிறநதரம மாகவே
கணடிடு மெரு வணுவாதி தானாதிப
பணடைய வாநின பகடடை யறுததிட
வொனறிய தீபமுணரந தாறகுண டாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நின்ற அவள் சத்தி நிறந்த தரம் ஆகவே
கண்டு இடும் மேரு அணு ஆதி தான் ஆதி
பண்டைய ஆ நின்ற பகட்டை அறுத்திட
ஒன்றிய தீபம் உணர்ந்தார்க்கு உண்டாகுமே.
பதப்பொருள்:
நின்ற (சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற) அவள் (இறைவியானவள்) சத்தி (பராசக்தியாக) நிறந்த (சாதகருக்குள் முழுவதும் நிறைந்து) தரம் (மிகவும் உயர்ந்த நிலை) ஆகவே (ஆகவே தமக்குள் செயல் படுவதை)
கண்டு (சாதகர் தரிசித்து) இடும் (தமக்குள் அவளை வைத்து வணங்கும் போது) மேரு (சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு செயல்படுகின்ற இறைவியே) அணு (அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும்) ஆதி (ஆதியாகவும்) தான் (அவருக்கு வெளியில் அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் தானே) ஆதி (ஆதியாகவும் இருக்கின்றாள்)
பண்டைய (அசையா சக்தியாகிய பரம்பொருளில் இருந்து முதன் முதலில் ஆசையினால் பிரிந்து வந்த) ஆ (ஆன்மாவுக்கு) நின்ற (உள்ளே இறைவனை விட்டு பிரிவதற்கு காரணமாக நின்ற) பகட்டை (அந்த ஆசையை) அறுத்திட (அவளே முழுவதுமாக அறுத்து அருளுகின்றாள்)
ஒன்றிய (பேரொளி வடிவமாகிய இறைவியோடு ஒன்றாக சேர்ந்து இருக்கின்ற) தீபம் (ஜோதி வடிவமாகிய சாதகரின் ஆன்மாவை) உணர்ந்தார்க்கு (தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களுக்கு) உண்டாகுமே (இறைவி ஆதியில் இருந்து தொடர்ந்து வருகின்ற ஆசையை அறுத்து மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்குகின்றாள்).
விளக்கம்:
பாடல் #1400 இல் உள்ளபடி சாதகருக்குள் இருக்கும் நவாக்கிரி சக்கரத்தில் வந்து நிற்கின்ற இறைவியானவள் பராசக்தியாக சாதகருக்குள் முழுவதும் நிறைந்து மிகவும் உயர்ந்த நிலையில் தமக்குள் செயல் படுவதை சாதகர் தரிசித்து தமக்குள் அவளை வைத்து வணங்கும் போது சாதகரின் உடலையே மொத்த சக்தி மயத்தின் உருவமான மேரு மலையாகக் கொண்டு அவள் செயல்படுகின்றாள். இப்படி சாதகருக்குள் செயல்படுகின்ற பராசக்தியான இறைவியே அவருக்குள் இருக்கும் ஒவ்வொரு அணுவிற்கும் ஆதியாகவும் அவருக்கு வெளியில் அண்ட சராசரத்தில் இருக்கின்ற அனைத்திற்கும் ஆதியாகவும் இருக்கின்றாள். அப்போது பேரொளி வடிவமாகிய இறைவியோடு ஜோதி வடிவமாகிய தனது ஆன்மாவும் ஒன்றாகச் சேர்ந்து இருப்பதை தமக்குள் உணர்ந்து கொண்ட சாதகர்களுக்கு அசையா சக்தியாகிய பரம்பொருளில் இருந்து முதன் முதலில் ஆசையினால் பிரிந்து வந்த சாதகரின் ஆன்மாவுக்கு உள்ளே இறைவனை விட்டு பிரிவதற்கு முழுமுதல் காரணமாகவும் ஆணி வேராகவும் இருக்கின்ற ஆசையை முழுவதுமாக அறுத்து மீண்டும் இறைவனோடு சேருவதற்கான வழியை உருவாக்கி அருளுகின்றாள் இறைவி.