பாடல் #1395: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
தாளதி னுள்ளே தயங்கிய சோதியைக்
காலது வாகக் கலந்துகௌம் னைம்என்று
மாலது வாக வழிபாடு செய்துநீ
பாலது போலப் பரந்தெழு விண்ணிலே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தாளதி னுளளெ தயஙகிய சொதியைக
காலது வாகக கலநதுகௌம னைமஎனறு
மாலது வாக வழிபாடு செயதுநீ
பாலது பொலப பரநதெழு விணணிலெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தாள் அதின் உள்ளே தயங்கிய சோதியை
கால் அது ஆகக் கலந்து கௌம் ஐம் என்று
மால் அது ஆக வழிபாடு செய்து நீ
பால் அது போலப் பரந்து எழு விண்ணிலே.
பதப்பொருள்:
தாள் (சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகள்) அதின் (அவற்றிற்கு) உள்ளே (உள்ளேயே) தயங்கிய (பிரகாசமாக இல்லாமல் மங்கி இருக்கும்) சோதியை (ஜோதியை)
கால் (மூச்சுக் காற்று) அது (மூலம்) ஆகக் (ஜோதியையே மூச்சுக் காற்றாக) கலந்து (கலந்து) கௌம் (‘கௌம்’ மற்றும்) ஐம் (‘ஐம்’ எனும் பீஜ மந்திரங்களை) என்று (அதோடு சேர்த்து ஜெபித்துக் கொண்டு)
மால் (காக்கின்ற தெய்வம்) அது (அதுவே) ஆக (என்று) வழிபாடு (எண்ணி தியானம்) செய்து (செய்தால்) நீ (சாதகர்கள்)
பால் (பசுவின் உடல் முழுவதும் உள்ள இரத்தமே பாலாக) அது (மாறுவது) போலப் (போல சாதகரின் உடல் முழுவதும் ஜோதியானது) பரந்து (பரந்து விரிந்து) எழு (சாதகரின் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து) விண்ணிலே (ஆகாயத்திலும் பரந்து விரிந்து கொண்டே இருக்கும்).
விளக்கம்:
பாடல் #1394 இல் உள்ளபடி சாதகருக்குள் வீற்றிருக்கின்ற இறைவியின் திருவடிகளுக்கு உள்ளேயே பிரகாசமாக இல்லாமல் மங்கி இருக்கும் ஜோதியை மூச்சுக் காற்றோடு கலந்து ‘கௌம்’ மற்றும் ‘ஐம்’ எனும் பீஜ மந்திரங்களை அதோடு சேர்த்து ஜெபித்துக் கொண்டு காக்கின்ற தெய்வமாக அந்த ஜோதியை எண்ணி தியானம் செய்தால் பசுவின் உடல் முழுவதும் உள்ள இரத்தமே பாலாக மாறுவது போல சாதகர்களின் உடல் முழுவதும் பரந்து இருக்கும் ஜோதியானது சாதகரின் உடலுக்குள்ளிருந்து மேலெழுந்து வந்து ஆகாயத்திலும் பரந்து விரிந்து கொண்டே இருக்கும்.
