பாடல் #1394: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
பச்சை யிவளுக்குப் பாங்கிமா ராறெட்டுக்
கொச்சைய ரெண்மர்கள் கூடி வருதலாற்
கச்சணி கொங்கைகள் கையிரு காப்பதாய்
எச்ச விடைச்சி யினிதிருந் தாளே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
பசசை யிவளுககுப பாஙகிமா ராறெடடுக
கொசசைய ரெணமரகள கூடி வருதலாற
கசசணி கொஙகைகள கையிரு காபபதாய
எசச விடைசசி யினிதிருந தாளெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
பச்சை இவளுக்குப் பாங்கிமார் ஆறு எட்டு
கொச்சையர் எண்மர்கள் கூடி வருதலால்
கச்சு அணி கொங்கைகள் கை இரு காப்பு அதாய்
எச்ச இடைச்சி இனிது இருந்தாளே.
பதப்பொருள்:
பச்சை (சாதகருக்குள் பசுமையாக வீற்றிருக்கின்ற) இவளுக்குப் (இறைவிக்கு) பாங்கிமார் (சரிசமமாக அவளைச் சூழ்ந்து நிற்கின்ற சக்திகள்) ஆறு (ஆறும்) எட்டு (எட்டும் பெருக்கி வரும் மொத்தம் நாற்பத்தெட்டு பேர் இருக்கின்றார்கள்)
கொச்சையர் (அவளுக்கு சரிசமமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்ற சக்திகள்) எண்மர்கள் (எட்டு பேரும்) கூடி (நாற்பத்து எட்டு பேரோடு கூட்டி மொத்தம் ஐம்பத்து ஆறு பேரும்) வருதலால் (அவளை எப்போதும் சூழ்ந்து வருவதால்)
கச்சு (அவர்கள் அனைவரும் மார்புக் கச்சைகளை) அணி (அணிந்து இருக்கும்) கொங்கைகள் (திருமார்புகளோடும்) கை (தங்களின் திருக்கரங்கள்) இரு (இரண்டிலும்) காப்பு (ஆயதங்களை ஏந்திக் கொண்டு காக்கின்ற) அதாய் (வளையமாக சூழ்ந்து இருக்க)
எச்ச (மெல்லிய) இடைச்சி (இடையைக் கொண்டு பசுமையாக இருக்கும் இறைவி அவர்களுக்கு நடுவில்) இனிது (இனிமையாக) இருந்தாளே (வீற்றிருந்தாள்).
விளக்கம்:
பாடல் #1393 இல் உள்ளபடி சாதகருக்குள் பசுமையாக வீற்றிருக்கின்ற இறைவிக்கு சரிசமமாக அவளைச் சூழ்ந்து நிற்கின்ற சக்திகள் நாற்பத்தெட்டு பேர் இருக்கின்றார்கள். அவளுக்கு சரிசமமாகவும் நெருக்கமாகவும் இருக்கின்ற சக்திகள் எட்டு பேரும் நாற்பத்து எட்டு பேரோடு கூட்டி மொத்தம் ஐம்பத்து ஆறு பேரும் அவளை எப்போதும் சூழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் அனைவரும் தங்களின் திருமார்புகளில் மார்புக் கச்சைகளை அணிந்து கொண்டும் தங்களின் திருக்கரங்கள் இரண்டிலும் ஆயதங்களை ஏந்திக் கொண்டும் காக்கின்ற வளையமாக சூழ்ந்து இருக்க மெல்லிய இடையைக் கொண்டு பசுமையாக இருக்கும் இறைவி அவர்களுக்கு நடுவில் இனிமையாக வீற்றிருந்தாள்.