பாடல் #1382: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
சூழ்ந்தெழு சோதி சுடர்முடி பாதமா
யாங்கணி முத்த மழகிய மேனியுந்
தாங்கிரு கையவை தார்கிளி ஞானமா
யேந்து கரங்க ளெடுத்தமா பாசமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
சூழநதெழு சொதி சுடரமுடி பாதமா
யாஙகணி முதத மழகிய மெனியுந
தாஙகிரு கையவை தாரகிளி ஞானமா
யெநது கரஙக ளெடுததமா பாசமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
சூழ்ந்து எழு சோதி சுடர் முடி பாதம் ஆய்
ஆங்கு அணி முத்தம் அழகிய மேனியும்
தாங்கி இரு கை அவை தார் கிளி ஞானம் ஆய்
ஏந்து கரங்கள் எடுத்த மா பாசமே.
பதப்பொருள்:
சூழ்ந்து (ஐம்பத்தாறு சக்திகளும் சூழ்ந்து நிற்க நடுவில் அமர்ந்து இருக்கின்ற இறைவியானவள்) எழு (மேலெழுந்து பரவுகின்ற) சோதி (மாபெரும் ஜோதி வடிவில்) சுடர் (ஜோதியின் சுடரானது) முடி (தலையாகவும்) பாதம் (ஜோதியின் அடிப்பாகமானது திருவடிகளாகவும்) ஆய் (கொண்டு)
ஆங்கு (ஜோதியின் நடுப்புறப் பகுதியே) அணி (அணிகலனாகிய) முத்தம் (முத்துக்கள் போலவும்) அழகிய (பேரழகு கொண்ட) மேனியும் (திருமேனியாகவும் கொண்டு)
தாங்கி (தாங்கி இருக்கின்ற) இரு (தனது இரண்டு) கை (திருக்கரங்களில்) அவை (ஏந்தி இருப்பவை) தார் (மலர்கொத்தின் மீது அமர்ந்திருக்கும்) கிளி (கிளியாகவும்) ஞானம் (உண்மையான ஞானத்தைக் கொடுக்கும் சின் முத்திரை) ஆய் (ஆகவும் வைத்திருக்கின்றாள்)
ஏந்து (மேல் புறமாக ஏந்தி இருக்கின்ற) கரங்கள் (தனது இரண்டு திருக்கரங்களில்) எடுத்த (அவள் எடுத்து வைத்திருப்பது) மா (ஆணவத்தை அழிக்கின்ற அங்குசமும்) பாசமே (பாசத்தை அறுக்கின்ற கயிறும் ஆகும்).
விளக்கம்:
பாடல் #1381 இல் உள்ளபடி ஐம்பத்தாறு சக்திகளும் சூழ்ந்து நிற்க நடுவில் அமர்ந்து இருக்கின்ற இறைவியானவள் மேலெழுந்து பரவுகின்ற மாபெரும் ஜோதி வடிவில் ஜோதியின் சுடரே தனது தலையாகவும் ஜோதியின் அடிப்பாகமே தனது திருவடிகளாகவும் கொண்டு இருக்கின்றாள். ஜோதியின் நடுப்புறப் பகுதியே அணிகலனாகிய முத்துக்கள் போலவும் பேரழகு கொண்ட திருமேனியாகவும் கொண்டு இருக்கின்றாள். அவள் தனது இரண்டு திருக்கரங்களிலும் மலர்கொத்தின் மீது அமர்ந்திருக்கும் கிளியையும் உண்மையான ஞானத்தைக் கொடுக்கும் சின் முத்திரையையும் தாங்கி இருக்கின்றாள். மேல் புறமாக ஏந்தி இருக்கின்ற தனது இரண்டு திருக்கரங்களில் ஆணவத்தை அழிக்கின்ற அங்குசத்தையும் பாசத்தை அறுக்கின்ற கயிறையும் வைத்து இருக்கின்றாள்.
