பாடல் #1381: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
ஆகின்ற மண்டலத் துள்ளே யமைந்தவ
ளாகின்ற வத்தனி நாயகி யானவ
ளாகின்ற வைம்பத் தறுசத்தி நேர்தரு
வாகின்ற வைம்பத் தறுவகை சூழவே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஆகினற மணடலத துளளெ யமைநதவ
ளாகினற வததனி நாயகி யானவ
ளாகினற வைமபத தறுசததி நெரதரு
வாகினற வைமபத தறுவகை சூழவெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஆகின்ற மண்டலத்து உள்ளே அமைந்தவள்
ஆகின்ற அத் தனி நாயகி ஆனவள்
ஆகின்ற ஐம்பத்து அறு சத்தி நேர் தரு
ஆகின்ற ஐம்பத்து அறு வகை சூழவே.
பதப்பொருள்:
ஆகின்ற (நன்மை செய்கின்ற நெருப்பு) மண்டலத்து (மண்டலத்தின்) உள்ளே (நடுவில்) அமைந்தவள் (வீற்றிருக்கின்ற இறைவியானவள்)
ஆகின்ற (நெருப்பு மண்டலமாகவே ஆகின்ற) அத் (அவளே) தனி (தனி ஒருவளாகவும்) நாயகி (தலைவியாகவும்) ஆனவள் (இருக்கின்றாள்)
ஆகின்ற (நெருப்பு மண்டலமாகவே ஆகின்ற) ஐம்பத்து (ஐந்து பத்தும்) அறு (ஆறும் கூட்டி மொத்தம் ஐம்பத்தாறு) சத்தி (சக்திகளும்) நேர் (இறைவிக்கு இணையான) தரு (அருளைத் தருபவர்களாக இருக்கின்றார்கள்)
ஆகின்ற (நெருப்பு மண்டலமாகவே ஆகின்ற) ஐம்பத்து (ஐந்து பத்தும்) அறு (ஆறும் கூட்டி மொத்தம் ஐம்பத்தாறு) வகை (வகையான சக்திகளும்) சூழவே (நடுவில் வீற்றிருக்கும் இறைவியை சுற்றியே இருக்கின்றார்கள்).
விளக்கம்:
பாடல் #1380 இல் உள்ளபடி தனக்குள் இருக்கும் சக்தியால் உயிர்களை ஈர்த்து நன்மை செய்கின்ற நெருப்பு மண்டலத்திற்கு உள்ளே நடுவில் வீற்றிருக்கின்ற இறைவியானவள் அவளே தனி ஒருவளாகவும் தலைவியாகவும் அந்த நெருப்பு மண்டலமாகவும் இருக்கின்றாள். பாடல் #1371 இல் உள்ளபடி இறைவியின் அம்சமாக எட்டு வகையாகவும் வகைக்கு எட்டு பேராகவும் மொத்தம் அறுபத்து நான்கு சக்திகள் இருக்கின்றார்கள். எட்டு வகையாக இருக்கின்ற சக்திகளில் வகைக்கு ஒருவராக மொத்தம் எட்டு சக்திகளும் இறைவியோடு சேர்ந்திருக்க மீதமுள்ள ஐம்பத்து ஆறு சக்திகளும் இறைவிக்கு இணையான அருளைத் தருபவர்களாக அவளைச் சூழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.