பாடல் #1377: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
மணிமுடி பாத சிலம்பணி மங்கை
யணிந்தவர்க் கன்றி யருளில்லை யாகுந்
தணிந்தவர் நெஞ்சினுட் டன்னரு ளாகிப்
பணிந்தவர்க் கன்றே பரகதி யாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
மணிமுடி பாத சிலமபணி மஙகை
யணிநதவரக கனறி யருளிலலை யாகுந
தணிநதவர நெஞசினுட டனனரு ளாகிப
பணிநதவரக கனறெ பரகதி யாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
மணி முடி பாதம் சிலம்பு அணி மங்கை
அணிந்தவர்க்கு அன்றி அருள் இல்லை ஆகும்
தணிந்தவர் நெஞ்சின் உள் தன் அருள் ஆகி
பணிந்தவர்க்கு அன்றே பர கதி ஆமே.
பதப்பொருள்:
மணி (நவரத்தினக் கற்களால் ஆன) முடி (கிரீடத்தை அணிந்து கொண்டும்) பாதம் (தனது திருவடியில்) சிலம்பு (சிலம்புகளை) அணி (அணிந்து கொண்டும்) மங்கை (சாதகர்களின் நிலைகளுக்கு ஏற்ப அருளுகின்ற என்றும் இளமையுடன் இருக்கின்ற இறைவியானவள்)
அணிந்தவர்க்கு (தமது மனதிற்குள் பதிய வைக்கின்ற சாதகரைத்) அன்றி (தவிர வேறு யாருக்கும்) அருள் (அவளது திருவருள்) இல்லை (கிடைப்பதற்கு மிகவும் அரியதாக) ஆகும் (இருக்கும்)
தணிந்தவர் (இறைவியின் தூய்மையான அன்பில் நிறைந்து இருக்கின்ற) நெஞ்சின் (சாதகரின் நெஞ்சத்திற்கு) உள் (உள்ளே நினைக்கின்ற அனைத்தும்) தன் (இறைவியின்) அருள் (திருவருளாகவே) ஆகி (ஆகிவிடும்)
பணிந்தவர்க்கு (அப்படி தனது மனதிற்குள் பதிய வைத்த இறைவியின் திருவடிகளை பணிந்து தொழுகின்ற சாதகர்களுக்கு) அன்றே (அவர்கள் பணிந்த அன்றே) பர (முக்தியை அடையும்) கதி (வழியாக) ஆமே (இறைவி இருப்பாள்).
விளக்கம்:
பாடல் #1376 இல் உள்ளபடி தனது ஆடையில் நவரத்தின மணிகளைப் பதித்து வைத்த பேரழகுடன் நினைத்த அந்த கணமே தோன்றுகின்ற இறைவியானவள் தனது தலையில் நவரத்தினக் கற்களால் ஆன கிரீடத்தை அணிந்து கொண்டும் தனது திருவடிகளில் சிலம்புகளை அணிந்து கொண்டும் சாதகர்களின் நிலைகளுக்கு ஏற்ப அருளுகின்ற என்றும் இளமையுடன் இறைவி இருக்கின்றாள். அவளை தமது மனதிற்குள் பதிய வைக்கின்ற சாதகரைத் தவிர வேறு யாருக்கும் அவளது திருவருள் அவ்வளவு எளிதில் கிடைப்பது இல்லை. இறைவியின் தூய்மையான அன்பில் நிறைந்து இருக்கின்ற சாதகரின் நெஞ்சத்திற்கு உள்ளே நினைக்கின்ற அனைத்தும் இறைவியின் திருவருளாகவே ஆகிவிடும். அப்படி தனது மனதிற்குள் பதிய வைத்த இறைவியின் திருவடிகளை பணிந்து தொழுகின்ற சாதகர்களுக்கு அவர்கள் பணிந்த அன்றே முக்தியை அடையும் வழியாக இறைவி இருப்பாள்.