பாடல் #1365

பாடல் #1365: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

ஒன்றிய சக்கர மோதிடும் வேளையில்
வெள்ளி கொள்மேனி மதிவட்டம் பொன்மையாங்
கன்றிய ரேகை கலந்திடுஞ் செம்மையில்
மன்றிய லம்மை யெழுத்தவை பச்சையே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

ஒனறிய சககர மொதிடும வெளையில
வெளளி கொளமெனி மதிவடடம பொனமையாங
கனறிய ரெகை கலநதிடுஞ செமமையில
மனறிய லமமை யெழுததவை பசசையெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

ஒன்றிய சக்கரம் ஓதிடும் வேளையில்
வெள்ளி கொள் மேனி மதி வட்டம் பொன்மை ஆம்
கன்றிய ரேகை கலந்திடும் செம்மையில்
மன்று இயல் அம்மை எழுத்து அவை பச்சையே.

பதப்பொருள்:

ஒன்றிய (சாதகர் மனம் ஒன்றி இருக்கின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) ஓதிடும் (ஜெபம் செய்கின்ற) வேளையில் (போது)
வெள்ளி (வெள்ளி போல) கொள் (வெண்மை நிற ஒளியைக் கொண்டு இருக்கும்) மேனி (சாதகரின் உடலானது) மதி (மனமும் அறிவும்) வட்டம் (முழுமை பெற்று) பொன்மை (தங்க நிற ஒளி) ஆம் (ஆக பிரகாசிக்கும்)
கன்றிய (அப்போது சக்கரத்தில் சக்தியூட்டம் பெற்று முழுமை அடைந்து இருக்கும்) ரேகை (கோடுகளானது) கலந்திடும் (சாதகரின் உடலோடு ஒன்றாக கலந்து) செம்மையில் (செழுமை பெறும்)
மன்று (அதன் பிறகு அம்பலத்தில் இறைவனோடு சேர்ந்து ஆடுகின்ற) இயல் (இயல்பை உடைய) அம்மை (இறைவியின்) எழுத்து (மந்திர எழுத்துக்களாக) அவை (சக்கரத்தில் இருக்கும் பீஜங்கள் அனைத்தும்) பச்சையே (தமது சக்தியூட்டம் குறையாமல் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும்).

விளக்கம்:

பாடல் #1364 இல் உள்ளபடி சாதகர் மனம் ஒன்றி இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை ஜெபம் செய்கின்ற போது வெள்ளி போல வெண்மை நிற ஒளியைக் கொண்டு இருக்கும் சாதகரின் உடலானது அவரது மனமும் அறிவும் முழுமை பெற்ற பிறகு தங்க நிற ஒளியாக மாறி பிரகாசிக்கும். அப்போது சக்கரத்தில் சக்தியூட்டம் பெற்று முழுமை அடைந்து இருக்கும் கோடுகளானது சாதகரின் உடலோடு ஒன்றாக கலந்து செழுமை பெறும். அதன் பிறகு அம்பலத்தில் இறைவனோடு சேர்ந்து ஆடுகின்ற இயல்பை உடைய இறைவியின் மந்திர எழுத்துக்களாக சக்கரத்தில் இருக்கும் பீஜங்கள் அனைத்தும் தமது சக்தியூட்டம் குறையாமல் எப்போதும் பசுமையாக நிலைத்து நிற்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.