பாடல் #1364: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
தானே யெழுந்தவச் சக்கரஞ் சொல்லிடில்
மானே மதிவரை பத்திட்டு வைத்தபின்
றேனே யிரேகை திகைப்பற வென்பதிற்
றானே கலந்தறை யெண்பத் தோடொன்றே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானெ யெழுநதவச சககரஞ சொலலிடில
மானெ மதிவரை பததிடடு வைததபின
றெனெ யிரெகை திகைபபற வொனபதிற
றானெ கலநதறை யெணபத தொடொனறெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தானே எழுந்த அச் சக்கரம் சொல்லிடில்
மானே மதி வரை பத்து இட்டு வைத்த பின்
தேனே இரேகை திகைப்பு அற ஒன்பதில்
தானே கலந்த அறை எண்பத்தோடு ஒன்றே.
பதப்பொருள்:
தானே (சாதகருக்குள்ளிருந்து தாமாகவே) எழுந்த (எழுந்து மேலே வந்த) அச் (நவாக்கிரி) சக்கரம் (சக்கரத்தைப் பற்றி) சொல்லிடில் (சொல்ல போனால்)
மானே (தமது மனதையும்) மதி (புத்தியையும்) வரை (ஒன்றாகச் சேர்த்து மானசீக கோடுகளாக) பத்து (இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் பத்து கோடுகள்) இட்டு (வரைந்து) வைத்த (முறைப்படி சக்கரத்தை அமைத்த) பின் (பிறகு)
தேனே (அமிழ்தமானது) இரேகை (அதன் கோடுகளிலிருந்து கிடைப்பதை பார்த்து) திகைப்பு (திகைத்து போய்) அற (நிற்காமல்) ஒன்பதில் (இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் உள்ள ஒன்பது அறைகளோடு)
தானே (அதனுடன் தாமும்) கலந்த (ஒன்றாகக் கலந்து இருக்கும்) அறை (அறைகளில் மொத்தம்) எண்பத்தோடு (எண்பத்தொன்று அறைகளில்) ஒன்றே (மனது ஒன்றி இருக்க வேண்டும்).
விளக்கம்:
நவாக்கிரி சக்கரத்தை சாதகர்கள் சாதகம் செய்யும் போது அவர்களுக்குள்ளிருந்து தாமாகவே எழுந்து மேலே வருகின்ற நவாக்கிரி சக்கரத்தைப் பற்றி சொல்ல போனால் தமது மனதையும் புத்தியையும் ஒன்றாகச் சேர்த்து மானசீக கோடுகளாக இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் பத்து கோடுகள் வரைந்து முறைப்படி சக்கரத்தை அமைக்க வேண்டும். அதன் பிறகு அந்தக் கோடுகளில் இருந்து கிடைக்கின்ற அமிழ்த்தைப் பார்த்து திகைத்து போய் நிற்காமல் இடமிருந்து வலமாகவும் மேலிருந்து கீழுமாகவும் உள்ள ஒன்பது அறைகளோடு தாமும் ஒன்றாகக் கலந்து நின்று சக்கரத்தில் இருக்கும் மொத்தம் எண்பத்தொன்று அறைகளிலும் மனது ஒன்றி இருக்க வேண்டும்.