பாடல் #1361

பாடல் #1361: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

தானே வெளியவ ளெங்கு நிறைந்தவள்
தானே வெளிக்கும் வெளியது வானவள்
தானே சகலமு மாக்கி யழித்தவள்
தானே யனைத்துள வண்ட சகலமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானெ வெளியவ ளெஙகு நிறைநதவள
தானெ வெளிககும வெளியது வானவள
தானெ சகலமு மாககி யழிததவள
தானெ யனைததுள வணட சகலமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தானே வெளி அவள் எங்கும் நிறைந்தவள்
தானே வெளிக்கும் வெளி அது ஆனவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்து உள அண்ட சகலமே.

பதப்பொருள்:

தானே (இறைவி தாமே) வெளி (ஆகாயமாக) அவள் (இருக்கின்றவள்) எங்கும் (அதிலுள்ள அனைத்திலும்) நிறைந்தவள் (நிறைந்து இருக்கின்றவள்)
தானே (இறைவி தாமே) வெளிக்கும் (ஆகாயத்திற்கும்) வெளி (மேலான பரவெளி) அது (ஆகவும்) ஆனவள் (இருக்கின்றவள்)
தானே (இறைவி தாமே) சகலமும் (அனைத்தையும்) ஆக்கி (உருவாக்கி) அழித்தவள் (அவற்றின் வினை முடிந்த பின் அழிக்கின்றவள்)
தானே (இறைவி தாமே) அனைத்து (அனைத்திலும்) உள (கலந்து உள்ளவளாகவும்) அண்ட (அண்ட சராசரத்திலுள்ள) சகலமே (அனைத்துமாகவும் இருக்கின்றாள்).

விளக்கம்:

பாடல் #1360 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் உணர்ந்து தெரிந்து கொள்ளுகின்ற இறைவி தாமே ஆகாயமாகவும் அதிலுள்ள அனைத்திலும் நிறைந்தும் இருக்கின்றவள். அவளே ஆகாயத்திற்கும் மேலான பரவெளியாகவும் இருக்கின்றவள். அவளே அனைத்தையும் உருவாக்கி அவற்றின் வினை முடிந்த பின் அழிக்கின்றவள். அவளே அனைத்திலும் கலந்து உள்ளவளாகவும் அண்ட சராசரத்திலுள்ள அனைத்துமாகவும் இருக்கின்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.