பாடல் #1360: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லில்
விளங்கிடு மெல்லிய லாளது வாகும்
விளங்கிடு மெய்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
விளஙகிடு மெலவரு மெயபபொருள சொலலில
விளஙகிடு மெலலிய லாளது வாகும
விளஙகிடு மெயநினற ஞானப பொருளை
விளஙகிடு வாரகள விளஙகினர தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
விளங்கிடும் மேல் வரும் மெய் பொருள் சொல்லில்
விளங்கிடும் மெல் இயல் ஆள் அது ஆகும்
விளங்கிடும் மெய் நின்ற ஞான பொருளை
விளங்க இடுவார்கள் விளங்கினர் தானே.
பதப்பொருள்:
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மேல் (உச்ச நிலையில்) வரும் (வருகின்ற) மெய் (பேருண்மையான) பொருள் (பரம்பொருளை) சொல்லில் (சொல்ல முயன்றால்)
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மெல் (மென்மையான) இயல் (இயல்பினைக் கொண்ட) ஆள் (இறைவியே) அது (நவாக்கிரி சக்கரம்) ஆகும் (ஆகவும் இருக்கின்றாள்)
விளங்கிடும் (தெரிந்து கொள்கின்ற) மெய் (சாதகரின் உடலுக்குள்) நின்ற (நிற்கின்ற) ஞான (உண்மையான ஞானத்தின்) பொருளை (பரம்பொருளை)
விளங்கிடும் (தெரிந்து) இடுவார்கள் (இருக்கின்றவர்களே) விளங்கினர் (தெளிவானவர்கள்) தானே (ஆவார்கள்).
விளக்கம்:
பாடல் #1359 இல் உள்ளபடி இறைவியே நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பேரொளியாகவும் இருக்கின்றாள் என்பதை சாதகர்கள் தெரிந்து கொள்கின்ற உச்ச நிலையில் வருகின்ற பேருண்மையான பரம்பொருளை சொல்ல முயன்றால் அதுவே மென்மையான இயல்பினைக் கொண்ட இறைவியாகவும் இருக்கின்றது. சாதகரின் உடலுக்குள் நிற்கின்ற உண்மையான ஞானத்தின் பரம்பொருளை தமக்குள் உணர்ந்து தெரிந்து இருக்கின்றவர்களே தெளிவானவர்கள் ஆவார்கள்.

ஆஹாஅருமை