பாடல் #1358

பாடல் #1358: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)

நின்றிடு மேழ்கட லேழ்புவி யெல்லா
நின்றிடு முள்ளம் நினைத்தவை தானொக்க
நின்றிடுஞ் சித்தி நிலைபெற கண்டிடில்
நின்றிடு மேலை விளக்கொளி தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

நினறிடு மெழகட லெழபுவி யெலலா
நினறிடு முளளம நினைததவை தானொகக
நினறிடுஞ் சிததி நிலைபெற கணடிடில
நினறிடு மெலை விளககொளி தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

நின்று இடும் ஏழ் கடல் ஏழ் புவி எல்லாம்
நின்று இடும் உள்ளம் நினைத்து அவை தான் ஒக்க
நின்று இடும் சித்தி நிலை பெறக் கண்டு இடில்
நின்று இடும் மேலை விளக்கு ஒளி தானே.

பதப்பொருள்:

நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) ஏழ் (ஏழு விதமான) கடல் (பெருங் கடல்களிலும்) ஏழ் (ஏழு விதமான) புவி (உலகங்களிலும்) எல்லாம் (அவரால் இருக்க முடியும்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) உள்ளம் (அவரது உள்ளத்தில்) நினைத்து (நினைத்த) அவை (அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே) தான் (அவரது) ஒக்க (எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) சித்தி (சாதகர் பெற்ற அருள் நிலையானது) நிலை (எப்போதும் மாறாமல் நிலையாக) பெறக் (இருப்பதை) கண்டு (அவர் கண்டு) இடில் (உணர்வார்)
நின்று (சாதகர் சமாதியில் இருந்து) இடும் (செய்கின்ற சாதகத்தினால்) மேலை (உச்சத்தில் இருந்து) விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியாகவும்) தானே (சாதகரே இருக்கின்றார்).

விளக்கம்:

பாடல் #1357 இல் உள்ளபடி சாதகர் சமாதியில் இருந்து இடைவிடாது செய்கின்ற சாதகத்தினால் ஏழு விதமான பெருங் கடல்களிலும் ஏழு விதமான உலகங்களிலும் அவரால் இருக்க முடியும். அது மட்டுமின்றி அவரது உள்ளத்தில் நினைத்த அனைத்து விஷயங்களும் அந்தக் கணத்திலேயே அவரது எண்ணத்திற்கு ஏற்றவாறே நடக்கும். அப்போது சாதகர் பெற்ற அருள் நிலையானது எப்போதும் மாறாமல் நிலையாக இருப்பதை அவர் கண்டு உணர்வார். அதன் பிறகு உச்சத்தில் இருந்து அனைத்தையும் விளங்க வைக்கின்ற பேரொளியாகவும் சாதகரே இருக்கின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.