பாடல் #1353: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
நின்றிட மேழு புவனமு மொன்றாகக்
கண்டிடு முள்ளங் கலந்தெங்குந் தானாகக்
கொண்டிடும் வையங் குணம்பல தன்னையும்
விண்டிடும் வல்வினை மெய்ப்பொரு ளாகுமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
நினறிட மெழு புவனமு மொனறாகக
கணடிடு முளளங கலநதெஙகுந தானாகக
கொணடிடும வையங குணமபல தனனையும
விணடிடும வலவினை மெயபபொரு ளாகுமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
நின்று இடும் ஏழு புவனமும் ஒன்றாகக்
கண்டு இடும் உள்ளம் கலந்து எங்கும் தான் ஆக
கொண்டு இடும் வையம் குணம் பல தன்னையும்
விண்டு இடும் வல் வினை மெய்ப் பொருள் ஆகுமே.
பதப்பொருள்:
நின்று (சாதகர் சாதகம்) இடும் (செய்கின்ற இடத்திலிருந்தே) ஏழு (ஏழு விதமான) புவனமும் (உலகங்களையும்) ஒன்றாகக் (ஒரு உலகம் போலவே ஒன்றாகக்)
கண்டு (தமக்குள் பார்ப்பதை) இடும் (செய்கின்ற சாதகரின்) உள்ளம் (உள்ளம்) கலந்து (அனைத்தோடும் கலந்து) எங்கும் (அனைத்தும்) தான் (தாமாகவே) ஆக (ஆகி இருப்பதை)
கொண்டு (ஒன்றாகப் பார்க்கின்றதை) இடும் (செய்கின்ற சாதகர்) வையம் (உலகத்தில் இருக்கின்ற) குணம் (தன்மைகள்) பல (பலவாறாக இருக்கின்ற) தன்னையும் (குணங்களையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள்)
விண்டு (உயிர்களிடமிருந்து பிரிப்பதை) இடும் (செய்கின்ற) வல் (கொடிய) வினை (வினைகளை எல்லாம் பிரித்து விடுகின்ற) மெய்ப் (நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மைப்) பொருள் (பொருளாகவே) ஆகுமே (சாதகரும் ஆகிவிடுவார்கள்).
விளக்கம்:
பாடல் #1352 இல் உள்ளபடி தமது எண்ணங்களில் எப்போதும் இறைவியை வைத்து தியானித்து இருக்கின்ற சாதகர்கள் தாம் சாதகம் செய்கின்ற இடத்திலிருந்தே ஏழு விதமான உலகங்களையும் ஒரு உலகம் போலவே ஒன்றாகப் பார்க்கின்ற உள்ளத்தைப் பெறுகிறார்கள். அப்படி அனைத்து உலகங்களையும் ஒன்றாகவே பார்க்கின்ற சாதகர்கள் அனைத்தோடும் கலந்து அனைத்தும் தாமாகவே ஆகி விடுவது மட்டுமின்றி உலகத்தில் பலவாறாக இருக்கின்ற தன்மைகள் அனைத்தையும் ஒன்றாகவே எடுத்துக் கொள்வார்கள். அதனால் உயிர்களிடமிருந்து கொடுமையான வினைகளைப் பிரித்து நவாக்கிரி சக்கரத்தில் இருக்கின்ற உண்மையை உணர்த்துகின்ற உண்மைப் பொருளாகவே சாதகரும் ஆகிவிடுவார்கள்.