பாடல் #1347: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
புகையில்லைச் சொல்லிய பொன்னொளி யுண்டங்
குகையில்லைக் கொல்வ திலாமை யினாலே
வகையில்லை வாழ்கின்ற மன்னுயிர்க் கெல்லாஞ்
சிகையில்லைச் சக்கரஞ் சேர்ந்தவர் தாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
புகையிலலைச சொலலிய பொனனொளி யுணடங
குகையிலலைக கொலவ திலாமை யினாலெ
வகையிலலை வாழகினற மனனுயிரக கெலலாஞ
சிகையிலலைச சககரஞ செரநதவர தாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
புகை இல்லை சொல்லிய பொன் ஒளி உண்டு அங்கு
உகை இல்லை கொல்வது இல்லாமையின் ஆலே
வகை இல்லை வாழ்கின்ற மன் உயிர்க்கு எல்லாம்
சிகை இல்லை சக்கரம் சேர்ந்தவர் தாமே.
பதப்பொருள்:
புகை (சாதகருக்கு எந்தவிதமான துன்பமும்) இல்லை (இல்லை) சொல்லிய (ஏற்கனவே சொல்லியது போல) பொன் (தங்க நிறத்தில் பிரகாசிக்கும்) ஒளி (ஒளி பொருந்திய) உண்டு (உடல் உண்டு) அங்கு (சாதகருக்கு)
உகை (ஒளி பொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள்) இல்லை (இல்லை ஏனென்றால்) கொல்வது (அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரை கொல்லுகின்ற) இல்லாமையின் (எண்ணமே இல்லாமல் இருக்கின்ற) ஆலே (காரணத்தினால்)
வகை (அவர் பிரித்துப் பார்ப்பது) இல்லை (இல்லை) வாழ்கின்ற (உலகத்தில் வாழ்கின்ற) மன் (அசையும்) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (அனைத்தையும்)
சிகை (அவருக்கு முடிவு) இல்லை (என்பதும் இல்லை) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) சேர்ந்தவர் (சேர்ந்தே இருக்கின்ற) தாமே (சாதகர்களுக்கு).
விளக்கம்:
பாடல் #1346 இல் உள்ளபடி இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும் இல்லை. பாடல் #1344 இல் சொல்லி உள்ளபடி தங்க நிறத்தில் பிரகாசிக்கும் ஒளி பொருந்திய உடலும் அவருக்கு உண்டு. ஒளி பொருந்திய சாதகர் இருக்கும் இடத்தில் மாபெரும் பாதகங்கள் எதுவும் இல்லை ஏனென்றால் அவரைச் சுற்றி எந்த உயிரும் இன்னொரு உயிரை கொல்லுகின்ற எண்ணமே இல்லாமல் இருக்கும் காரணத்தினால். இந்த உலகத்தில் வாழ்கின்ற அசையும் உயிர்கள் அனைத்தையும் பல வகைகளாக பிரித்துப் பார்க்காமல் இறை அம்சமாகவே பார்க்கின்றார். இப்படி நவாக்கிரி சக்கரத்தை சேர்ந்தே இருக்கின்ற சாதகர்களுக்கு முடிவு என்பதும் இல்லை.