பாடல் #1346: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
அறிந்திடுஞ் சக்கர மற்சனை யோடே
யறிந்திடும் வையத்திடர் வகை காணில்
மறிந்திடு மன்னனும் வந்தனை செய்யிற்
பொறிந்திடுஞ் சிந்தை புகையில்லை தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அறிநதிடுஞ சககர மறசனை யொடெ
யறிநதிடும வையததிடர வகை காணில
மறிநதிடு மனனனும வநதனை செயயிற
பொறிநதிடுஞ சிநதை புகையிலலை தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அறிந்திடும் சக்கரம் அருச்சனை யோடே
அறிந்திடும் வையத்து இடர் வகை காணில்
மறிந்திடும் மன்னனும் வந்தனை செய்யில்
பொறிந்திடும் சிந்தை புகை இல்லை தானே.
பதப்பொருள்:
அறிந்திடும் (சாதகர் அறிந்து கொண்ட) சக்கரம் (நவாக்கிரி சக்கரத்தை) அருச்சனை (தமக்குள்ளேயே வைத்து பூஜைகள்) யோடே (செய்து கொண்டே இருந்தால்)
அறிந்திடும் (சாதகர் அறிந்து கொண்ட) வையத்து (உலகத்தில் உள்ள) இடர் (துன்பங்களின்) வகை (வகைகள் அனைத்தையும்) காணில் (கண்டு கொண்டால் அதிலிருந்து விலகி இருக்க முடியும்)
மறிந்திடும் (பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களை காக்கின்ற) மன்னனும் (அரசர்களும்) வந்தனை (வந்து வணக்கம்) செய்யில் (செலுத்தும் நிலையில் இருந்து)
பொறிந்திடும் (இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற) சிந்தை (சாதகரின் சிந்தனைக்குள்) புகை (எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும்) இல்லை (இல்லாமல் எப்போதும்) தானே (பேரின்பத்திலேயே இருப்பார்).
விளக்கம்:
பாடல் #1345 இல் உள்ளபடி இறைவியை தமக்குள் முழுவதுமாக அறிந்து கொண்ட சாதகர்கள் அவள் வீற்றிருக்கும் நவாக்கிரி சக்கரத்தை தமக்குள்ளேயே பூஜித்து வந்தால் அவர்களால் உலகத்திலுள்ள அனைத்து விதமான துன்பங்களையும் கண்டு அறிந்து கொண்டு அவற்றில் இருந்து விலகி இருக்க முடியும். இந்த நிலையை அடைந்த சாதகர்களை பகைவர்களைத் தடுத்து நாட்டு மக்களை காக்கின்ற பெரும் அரசர்களும் அவர் இருக்கும் இடம் தேடி வந்து அவரை வணங்குவார்கள். அரசர்களும் வந்து வணங்கினாலும் உலகப் பற்று இல்லாமல் இறை நினைப்பிலேயே திளைத்து இருக்கின்ற சாதகர்களின் சிந்தனைக்குள் எந்தவிதமான துன்பகரமான எண்ணங்களும் வராமல் அவர்கள் எப்போதும் பேரின்பத்திலேயே இருப்பார்கள்.