பாடல் #1341: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
தானே கழறித் தறியவும் வல்லனாய்த்
தானே நினைத்தவை சொல்லவும் வல்லனாய்த்
தானே தனிநடங் கண்டவள் தன்னையுந்
தானே வணங்கித் தலைவனு மாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தானெ கழறித தறியவும வலலனாயத
தானெ நினைததவை சொலலவும வலலனாயத
தானெ தனிநடங கணடவள தனனையுந
தானெ வணஙகித தலைவனு மாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தானே கழறித்து அறியவும் வல்லன் ஆய்
தானே நினைத்த அவை சொல்லவும் வல்லன் ஆய்
தானே தனி நடம் கண்டவள் தன்னையும்
தானே வணங்கித் தலைவனும் ஆமே.
பதப்பொருள்:
தானே (சாதகர் தமக்குள்) கழறித்து (இருக்கின்ற அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு) அறியவும் (தாம் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ள) வல்லன் (முடிந்தவர்) ஆய் (ஆகவும்)
தானே (சாதகர் தமக்குள்) நினைத்த (எண்ணிப் பார்த்து அறிந்து கொண்ட) அவை (இறை தன்மைகள் அனைத்தையும்) சொல்லவும் (குருவாக இருந்து பிறருக்கு எடுத்துக் கூற) வல்லன் (முடிந்தவர்) ஆய் (ஆகவும்)
தானே (சாதகர் தமக்குள்) தனி (இறைவன் தமக்காக தனியாக) நடம் (ஆடிய திருநடனத்தை) கண்டவள் (கண்டு ரசித்த) தன்னையும் (இறைவியையும்)
தானே (சாதகர் தமக்குள்) வணங்கித் (தரிசித்து வணங்கி) தலைவனும் (மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவும்) ஆமே (இருக்கின்றார்).
விளக்கம்:
நவாக்கிரி சக்கரத்தை சாதகம் செய்கின்ற சாதகர் அதன் மூலம் தமக்குள் இருக்கின்ற அனைத்து தீமைகளையும் நீக்கி விட்டு தாம் உண்மையில் யார் என்பதை அறிந்து கொள்ள முடிந்தவராக இருக்கின்றார். அதன் பயனால் சாதகர் தமக்குள் எண்ணிப் பார்த்து அறிந்து கொண்ட இறை தன்மைகள் அனைத்தையும் குருவாக வீற்றிருந்து பிறருக்கு எடுத்துக் கூற முடிந்தவராகவும் இருக்கின்றார். அதன் பயனால் இறைவன் தமக்காக தனியாக ஆடிய திருநடனத்தை கண்டு ரசித்த இறைவியையும் சாதகர் தமக்குள் தரிசித்து வணங்கவும் மற்றவர்களால் வணங்கப்படும் தலைவனாகவும் இருக்கின்றார்.