பாடல் #1335: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
அளித்திடு நாவுக் கரசிவள் தன்னைப்
பழுத்திடும் வேதமெய் யாகம மெல்லாந்
தொகுத்தொரு நாவிடைச் சொல்ல வல்லாளை
முகத்துளு முன்னெழக் கண்டு கொளீரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
அளிததிடு நாவுக கரசிவள தனனைப
பழுததிடும வெதமெய யாகம மெலலாந
தொகுததொரு நாவிடைச சொலல வலலாளை
முகததுளு முனனெழக கணடு கொளீரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
அளித்து இடு நாவுக்கு அரசி இவள் தன்னைப்
பழுத்து இடும் வேத மெய் ஆகமம் எல்லாம்
தொகுத்து ஒரு நாவு இடைச் சொல்ல வல்லாளை
முகத்து உளும் முன் எழக் கண்டு கொளீரே.
பதப்பொருள்:
அளித்து (சாதகர்கள் அளித்துக்) இடு (கொடுக்கின்ற) நாவுக்கு (நாக்குக்கு) அரசி (அரசியாக இருக்கும்) இவள் (இறைவியானவளின்) தன்னைப் (உட் பொருளை அறிந்து)
பழுத்து (முக்தி பெறுவதற்கு) இடும் (வழி கொடுக்கும்) வேத (வேதங்களும்) மெய் (பேருண்மையான) ஆகமம் (ஆகமங்களும்) எல்லாம் (ஆகிய அனைத்தையும்)
தொகுத்து (ஒன்றாகத் தொகுத்து) ஒரு (தனது ஓரே) நாவு (நாக்கின்) இடைச் (நடுவில் வைத்து) சொல்ல (எடுத்துச் சொல்லும்) வல்லாளை (வல்லமை பொருந்திய இறைவியானவளை)
முகத்து (எந்த வடிவத்தில்) உளும் (நினைத்து வழிபடுகிறீர்களே) முன் (அந்த வடிவத்திலேயே உங்களின் முன்னால்) எழக் (எழுந்தருளுவதை) கண்டு (கண்களால் பார்த்துக்) கொளீரே (கொள்ளுங்கள்).
விளக்கம்:
பாடல் #1334 இல் உள்ளபடி இறைவியானவளின் திருவருளை தகுதியானவர்களுக்கு அளிக்கும் சாதகர்களின் நாக்குக்கு அரசியாக இருக்கும் இறைவியானவளை முழுவதும் அறிந்து கொண்டு முக்தி பெறுவதற்கு வழி கொடுக்கும் வேதங்கள், பேருண்மையான ஆகமங்கள் ஆகிய அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து தனது ஓரே நாக்கின் நடுவில் வைத்து எடுத்துச் சொல்லும் வல்லமை பொருந்திய இறைவியானவளை எந்த வடிவத்தில் சாதகர்கள் நினைத்து வழிபடுகிறார்களோ அந்த வடிவத்திலேயே அவர்களின் முன்னால் எழுந்தருளுவதை தங்களின் கண்களால் அவர்கள் பார்த்து தரிசிப்பார்கள்.