பாடல் #1334: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
ஐமுத லாக வலர்ந்தெழு சக்கரம்
மைமுத லாக வலர்ந்தி றீயீராகு
மைமுத லாகி யவற்குடை யாள்தன்னை
யைமுத லாக வளித்திடு நீயே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஐமுத லாக வலரநதெழு சககர
மைமுத லாக வலரநதி றீயீராகு
மைமுத லாகி யவறகுடை யாளதனனை
யைமுத லாக வளிததிடு நீயெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஐம் முதல் ஆக அலர்ந்து எழு சக்கரம்
ஐம் முதல் ஆக அலர்ந்து இறீ ஈர் ஆகும்
ஐம் முதல் ஆகியவற்கு உடையாள் தன்னை
ஐம் முதல் ஆகவே அளித்திடு நீயே.
பதப்பொருள்:
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தை) முதல் (முதல்) ஆக (பீஜமாக வைத்து) அலர்ந்து (பரந்து விரிந்து) எழு (எழுகின்ற) சக்கரம் (நவாக்கிரி சக்கரமானது)
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தை) முதல் (முதல்) ஆக (பீஜமாக வைத்து) அலர்ந்து (விரிவடைந்து) இறீ (‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தோடு சேர்ந்து) ஈர் (இரண்டாக) ஆகும் (ஆகிவிடும்)
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தின்) முதல் (முதலாகவே) ஆகியவற்கு (ஆகிவிட்ட சாதகர்கள்) உடையாள் (தன் வசத்தில் வைத்திருக்கும்) தன்னை (இறைவியானவளின் திருவருளையும்)
ஐம் (‘ஐம்’ எனும் பீஜத்தின்) முதல் (முதல்) ஆகவே (ஆக வைத்தே) அளித்திடு (தகுதியானவர்களுக்கு கொடுங்கள்) நீயே (நீங்களே).
விளக்கம்:
‘ஐம்’ எனும் பீஜத்தை முதலாக வைத்து பரந்து விரிந்து எழுகின்ற நவாக்கிரி சக்கரமானது விரிவடையும் போது ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தோடு சேர்ந்து இரண்டாக ஆகிவிடும். ‘ஐம்’ எனும் பீஜமாகவே ஆகிவிட்ட சாதகர்கள் தன் வசத்தில் வைத்திருக்கும் இறைவியானவளின் திருவருளையும் தகுதியானவர்களுக்கு கொடுக்கும் போது ‘ஐம்’ எனும் பீஜத்தை முதலாக வைத்தே நீங்களும் அளிப்பீர்களாக.
கருத்து: நவாக்கிரி சக்கரத்திற்கு இறைவியே முதலாக இருப்பதைப் போலவே அவளின் திருவருளை பெற்றுத் தரும் மந்திர பீஜங்களுக்கு ‘ஐம்’ எனும் பீஜமே முதலாக இருக்கின்றது.
