பாடல் #1332: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
கூறுமின் னெட்டுத் திசைக்குந் தலைவியை
மாறுமின் ணடத் தமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும்வழி தன்னையுந்
தேறுமின் னாயகி சேவடி சேர்ந்தே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
கூறுமின னெடடுத திசைககுந தலைவியை
மாறுமின ணடத தமரரகள வாழவென
மாறுமின வையம வருமவழி தனனையுந
தெறுமின னாயகி செவடி செரநதெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
கூறுமின் எட்டுத் திசைக்கும் தலைவியை
மாறும் இன் நடத்து அமரர்கள் வாழ்வென
மாறுமின் வையம் வரும் வழி தன்னையும்
தேறுமின் நாயகி சேவடி சேர்ந்தே.
பதப்பொருள்:
கூறுமின் (அருமைகளையும் பெருமைகளையும் போற்றி எடுத்துக் கூறுங்கள்) எட்டுத் (எட்டு விதமான) திசைக்கும் (திசைகளுக்கும்) தலைவியை (தலைவியாக இருக்கின்ற இறைவியின்)
மாறும் (அப்போது மாறும்) இன் (இந்த) நடத்து (உலகத்தில் நன்மைகளை நடத்துகின்ற) அமரர்கள் (இறவா வாழ்க்கையைப் பெற்ற அமரர்களின்) வாழ்வென (வாழ்க்கையைப் போலவே சாதகர்களின் வாழ்க்கையும்)
மாறுமின் (அதன் படியே சாதகர்களும் மாற்றுங்கள்) வையம் (இந்த உலகத்தில்) வரும் (இயற்கையாகவே வருகின்ற) வழி (வழிகள்) தன்னையும் (அனைத்தையும் அமரர்களின் வாழ்க்கை முறைக்கேற்ற வழிகளாக)
தேறுமின் (அதன் பிறகு முழுவதும் தெளிவாக ஆராயந்து தெரிந்து கொள்ளுங்கள்) நாயகி (அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின்) சேவடி (வணங்கத் தக்கத் திருவடிகளை) சேர்ந்தே (எப்போதும் சேர்ந்தே இருந்து).
விளக்கம்:
பாடல் #1331 இல் உள்ளபடி எட்டு விதமான திசைகளுக்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் அருமைகளையும் பெருமைகளையும் போற்றி தகுதியானவர்களுக்கு எடுத்துக் கூறுங்கள். அப்போது இந்த உலகத்தில் நன்மைகளை நடத்துகின்ற இறப்பு இல்லாத நிலையைப் பெற்ற அமரர்களின் வாழ்க்கையைப் போலவே சாதகர்களின் வாழ்க்கையும் மாறும். அதன் படியே இந்த உலகத்தில் இயற்கையாகவே வருகின்ற வழிகள் (தாகம், பசி, தூக்கம், கழிவு வெளியேற்றம், முதுமையடைதல்) அனைத்தையும் அமரர்களின் வாழ்க்கை முறைக்கேற்ற வழிகளாக நீங்களும் மாற்றுங்கள். அனைத்திற்கும் தலைவியாக இருக்கின்ற இறைவியின் வணங்கத் தக்கத் திருவடிகளை எப்போதும் சேர்ந்தே இருந்து இதையெல்லாம் செய்யும் முறைகளை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள்.