பாடல் #1245: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
பொற்கொடி மாதர் புனைகழ லேத்துவர்
அற்கொடி மாதுமை யார்வத் தலைமகள்
நற்கொடி மாதை நயனங்கள் மூன்றுடை
விற்கொடி மாதை விரும்பி விளங்கே.
விளக்கம்:
பாடல் #1238 இல் உள்ளபடி இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரின் பேரழகுடைய திருவடிகளை தூய்மையின் உருவமாக தங்க நிறத்தில் கொடி போல மென்மையாக இருக்கும் உப சக்திகள் அனைவரும் நாடி வந்து போற்றி வணங்குவார்கள். அந்த உப சக்திகளின் நிலையை அடைய வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருக்கின்ற அனைத்து உயிர்களும் இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர் மாயையின் உருவத்தில் கருமை நிறத்தில் கொடி போன்ற மென்மையுடன் இருக்கும் போது அவரை நாடி வருகின்ற உயிர்களுக்கு தலைவியாகவும் இருக்கின்றார். அவரே உயிர்களுக்கு நன்மை தரும் உருவமாக கொடி போன்ற மென்மையுடன் மூன்று கண்களைக் கொண்டு மாயையை நீக்கி உண்மையை உணர்த்தும் போது இறைவியின் பேரொளியின் உருவத்தில் இருக்கும் அவரை விரும்பி போற்றி வணங்கி நீங்களும் உண்மையை விளங்கிக் கொள்ளுங்கள்.