பாடல் #1379: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
தனமது வாகிய தையலை நோக்கி
மனமது வோடி மறிக்கிலோ ராண்டிற்
கனமவை யற்றுக் கருதிய நெஞ்சந்
தினகர னாரிடச் செய்தி யதாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
தனமது வாகிய தையலை நொககி
மனமது வொடி மறிககிலொ ராணடிற
கனமவை யறறுக கருதிய நெஞசந
தினகர னாரிடச செயதி யதாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
தனம் அது ஆகிய தையலை நோக்கி
மனம் அது ஓடி மறிக்கில் ஓர் ஆண்டில்
கனம் அவை அற்றுக் கருதிய நெஞ்சம்
தினகரனார் இட செய்தி அது ஆமே.
பதப்பொருள்:
தனம் (நவாக்கிரி சக்கரத்தில் உள்ள பீஜ மந்திரங்களின் பலனை) அது (அளிக்கின்ற) ஆகிய (சக்தியாகிய) தையலை (சக்கரத்தோடு ஒன்றாக இணைந்து இருக்கின்ற இறைவியை) நோக்கி (நினைத்து)
மனம் (மனதில் இருக்கின்ற) அது (எண்ணங்களை) ஓடி (வெளியில் சென்று விடும்படி செய்து / ஒருமுகப் படுத்தி) மறிக்கில் (எண்ணங்கள் அற்ற நிலையில்) ஓர் (ஒரு) ஆண்டில் (வருடம் தியானத்தில் இருந்தால்)
கனம் (பிறவிக்கு பாரமான) அவை (அனைத்தும்) அற்றுக் (சாதகரை விட்டு நீங்கிவிட) கருதிய (இறைவியையே எண்ணி தியானித்து இருந்த) நெஞ்சம் (சாதகருடைய நெஞ்சத்தில்)
தினகரனார் (இருக்கின்ற மாயையாகிய இருளை நீக்கி விடும் சூரியனைப் போல பேரொளியுடன் இறைவன் வந்து) இட (தமது திருவடியை வைத்து அருளுவார்) செய்தி (நவாக்கிரி சக்கரத்தின் தன்மை) அது (இதுவே) ஆமே (ஆகும்).
விளக்கம்:
பாடல் #1378 இல் உள்ளபடி நவாக்கிரி சக்கரத்தோடு ஒன்றாக இணைந்து இருந்து அதிலுள்ள பீஜ மந்திரங்களின் பலனை அளிக்கின்ற சக்தியாகிய இறைவியை மட்டுமே நினைத்து கொண்டு மனதில் இருக்கின்ற மற்ற எண்ணங்களை எல்லாம் வெளியில் சென்று விடும்படி செய்து எண்ணங்கள் அற்ற நிலையில் ஒரு வருடம் தியானத்தில் இருந்தால் பிறவிக்கு பாரமான அனைத்தும் சாதகரை விட்டு நீங்கிவிடும். அதன் பிறகு இறைவியையே எண்ணி தியானித்து இருந்த சாதகருடைய நெஞ்சத்தில் இருக்கின்ற மாயையாகிய இருளை நீக்கி விடும் சூரியனைப் போல பேரொளியுடன் இறைவன் வந்து தமது திருவடியை வைத்து அருளுவார். நவாக்கிரி சக்கரத்தின் தன்மை இதுவே ஆகும்.