பாடல் #1359: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
விளக்கொளி சௌமுதல் வௌவது வீறாம்
விளக்கொளி சக்கர மெய்ப்பொரு ளாகும்
விளக்கொளி யாகிய மின்கொடி யாளை
விளக்கொளி யாக விளங்கிடு நீரே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
விளககொளி சௌமுதல வௌவது வீறாம
விளககொளி சககர மெயபபொரு ளாகும
விளககொளி யாகிய மினகொடி யாளை
விளககொளி யாக விளஙகிடு நீரெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
விளக்கு ஒளி சௌம் முதல் ஔம் அது ஈறாம்
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப் பொருள் ஆகும்
விளக்கு ஒளி ஆகிய மின் கொடி ஆளை
விளக்கு ஒளி ஆக விளங்கிடும் நீரே.
பதப்பொருள்:
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியானது) சௌம் (‘சௌம்’ எனும் பீஜத்தை) முதல் (முதலில் வைத்தும்) ஔம் (‘ஔம்’ எனும் பீஜத்தை) அது (முறைப்படி அமைத்து) ஈறாம் (கடைசியிலும் இருக்கின்றது)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியானது) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும்) மெய்ப் (அதற்குள் இருக்கின்ற உண்மை) பொருள் (பொருளாகவும்) ஆகும் (இருக்கின்றது)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளியாக) ஆகிய (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில்) மின் (மின்னல் போன்ற) கொடி (மாபெரும் சக்தியாக இருக்கின்ற) ஆளை (இறைவியை)
விளக்கு (அனைத்தையும் விளங்க வைக்கின்ற) ஒளி (பேரொளி) ஆக (ஆகவே இருக்கின்றாள் என்பதை) விளங்கிடும் (தெரிந்து கொள்ளுங்கள்) நீரே (நீங்கள்).
விளக்கம்:
பாடல் #1358 இல் உள்ளபடி இடைவிடாது சாதகம் செய்து அனைத்தையும் விளங்க வைக்கின்ற பேரொளியானது ‘சௌம்’ எனும் பீஜத்தை முதலில் வைத்தும் ‘ஔம்’ எனும் பீஜத்தை முறைப்படி அமைத்து கடைசியிலும் இருக்கின்றது. அந்தப் பேரொளியே நவாக்கிரி சக்கரமாகவும் அதற்குள் இருக்கின்ற உண்மை பொருளாகவும் இருக்கின்றது. இப்படி பேரொளியாக இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தில் மின்னல் போன்ற மாபெரும் சக்தியாக இருக்கின்ற இறைவியே அந்தப் பேரொளியாகவும் இருக்கின்றாள் என்பதை சாதகர்கள் தெரிந்து கொள்வார்கள்.