பாடல் #1349: நான்காம் தந்திரம் – 13. நவாக்கிரி சக்கரம் (ஒன்பது சக்திகளின் திருமேனியாக இருக்கும் அட்சரங்களைக் கொண்ட சக்கரம்)
ஒளியது ஹௌ முதல்ஹ்ரீ மதுவீறாங்
களியது சக்கரங் கண்டறி வார்க்குத்
தெளிவது ஞானமுஞ் சிந்தையுந் தேறப்
பளியது பஞ்சாக் கரமது வாமே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
ஒளியது ஹெள முதலஹரீ மதுவீறாங
களியது சககரங கணடறி வாரககுத
தெளிவது ஞானமுஞ சிநதையுந தெறப
பளியது பஞசாக கரமது வாமெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
ஒளி அது ஹௌ முதல் ஹ்ரீம் அது ஈறு ஆம்
களி அது சக்கரம் கண்டு அறிவார்க்குத்
தெளிவு அது ஞானமும் சிந்தையும் தேறப்
பளி அது பஞ்ச அக்கரம் அது ஆமே.
பதப்பொருள்:
ஒளி (பேரொளி அம்சமாகவே) அது (இருக்கின்ற நவாக்கிரி சக்கரத்தை) ஹௌ (ஹௌம் எனும் பீஜம்) முதல் (முதலில் இருந்து) ஹ்ரீம் (ஹ்ரீம் எனும்) அது (பீஜத்தை) ஈறு (கடைசியாக வைத்து) ஆம் (முறைப்படி அமைத்து தியானித்தால்)
களி (உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்ற) அது (அதுவே) சக்கரம் (நவாக்கிரி சக்கரமாகவும் இருப்பதை) கண்டு (தமக்குள் கண்டு) அறிவார்க்குத் (அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு)
தெளிவு (உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும்) அது (அதுவே இருந்து) ஞானமும் (உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும்) சிந்தையும் (எண்ணங்கள்) தேறப் (தேர்ச்சி பெறும் ஞானத்தை)
பளி (கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும்) அது (அதுவே இருந்து) பஞ்ச (இறைவனின் எழுத்து வடிவான ஐந்து) அக்கரம் (அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும்) அது (அதுவே) ஆமே (இருக்கின்றது).
விளக்கம்:
பாடல் #1348 இல் உள்ளபடி தகுதியானவர்களுக்கு மாயை அழித்து ஞானத்தைக் கொடுக்கின்ற சாதகர்களுக்கு உள்ளே இருக்கின்ற ஒளியான நவாக்கிரி சக்கரத்தில் ‘ஹௌம்’ எனும் பீஜம் முதலில் வைத்து ‘ஹ்ரீம்’ எனும் பீஜத்தை கடைசியாக வைத்து முறைப்படி அமைத்து தியானித்தால் உள்ளுக்குள் பேரின்பத்தைக் கொடுக்கின்றதாக அதுவே இருக்கும். இந்த நவாக்கிரி சக்கரத்தை தமக்குள் கண்டு அறிந்து கொள்ளுகின்ற சாதகர்களுக்கு உண்மை பொருளை தெளிவு படுத்துவதாகவும் அதுவே இருந்து உண்மை ஞானத்தைக் கொடுப்பதாகவும், எண்ணங்கள் தெளிவு பெறும் அறிவைக் கற்றுக் கொடுக்கின்ற இடமாகவும் அதுவே இருக்கும். அது மட்டுமின்றி இறைவனின் எழுத்து வடிவான ஐந்து அட்சரங்களைக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரமாகவும் அதுவே இருக்கின்றது.