பாடல் #1175: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தக்க பராவித்தை தானிரு பத்தேழில்
தக்கெழு மோருத்தி ரஞ்சொல்லச் சொல்லவே
மிக்கிடு மென்சக்தி வெண்ணிற முக்கண்ணி
தொக்க கதையோடு தொன்முத்திரை யாளே.
விளக்கம்:
பாடல் #1174 இல் உள்ளபடி ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாத என்று அறிந்து உணர்ந்து கொள்வதற்கு ஏற்ற தூய்மையான பொருளாக இருக்கின்ற பராசக்தியின் பேரறிவைக் கொடுக்கும் தத்துவமானது தானாகவே இருபத்து ஏழு விதமான தத்துவங்களாக இருக்கின்றது. இந்த தத்துவங்களைப் பெற்று பேரறிவைப் பெறுவதற்கு ஏற்றதாக சாதகரின் உள்ளுக்குள்ளிருந்து எழுகின்ற ஒரு மந்திரத்தை அவர் திரும்பத் திரும்ப செபித்து தியானித்துக் கொண்டே இருந்தால் அவருக்குள்ளிருந்து மிகுதியாக வெளிப்பட்டு எழுகின்ற இறைவியானவள் வெள்ளை நிறத்துடனும் மூன்று கண்களுடனும் கதை ஆயுதத்தை ஏந்திக் கொண்டும் ஆதி முத்திரையைக் காட்டிக் கொண்டும் இருப்பாள்.