பாடல் #1235

பாடல் #1235: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

திருந்து சிவனுஞ் சிலைநுத லாளும்
பொருந்திய வானவர் போற்றிசெய் தேத்த
அருந்திட அவ்விட மாரமு தாக
இருந்தனள் தானங் கிளம்பிறை யென்றே.

விளக்கம்:

பாடல் #1234 இல் உள்ளபடி தமது சிந்தனைக்குள் இருக்கும் மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே மாறிவிட்ட சாதகருக்குள் வீற்றிருக்கின்ற சிவனும் வில் போன்ற வளைந்த நெற்றியைக் கொண்ட இறைவியும் அவர்களோடு சேர்ந்து வந்து வீற்றிருக்கும் விண்ணுலகத்து தேவர்களும் சாதகருக்குள் இருக்கும் ஒன்றான அம்சத்தை புகழ்ந்து போற்றி வணங்கி வழிபட அவர்கள் அருந்துவதற்கு அந்த இடத்திலேயே எப்போதும் தெகிட்டாத அமிழ்தமாகவும் வளர் பிறைச் சந்திரனாகவும் இறைவியே இருக்கின்றாள்.

பாடல் #1236

பாடல் #1236: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

என்று மெழுகின்ற ஏரினை யெய்தினார்
அன்றது வாகுவர் தாழ்குழ லாளொடு
மன்றரு கங்கை மதியொடு மாதவர்
துன்றிய தாரகை சோதிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1235 இல் உள்ளபடி எப்போதும் தெகிட்டாத அமிழ்தமாக எழுச்சியோடு இருந்து கொண்டே இருக்கின்ற பேரழகு வாய்ந்த இறைவியை தமக்குள் உணர்ந்து அடைந்தவர்கள் அடைந்த அந்தப் பொழுதிலேயே இறைவியாகவே ஆகிவிடுவார்கள். அவர்களோடு நீண்ட கூந்தலை உடைய இறைவியும் தீயவற்றை நீக்கி தூய்மையைத் தருகின்ற கங்கையாகவும் குளிர்ந்த ஒளியைத் தருகின்ற நிலவாகவும் மாபெரும் தவத்தைப் புரிந்த சாதகர்களோடு எப்போதும் பொருந்தி இருக்கின்ற நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்றாள்.

பாடல் #1237

பாடல் #1237: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நின்றனள் நேரிழை யாளொடு நேர்பட
ஒன்றிய வுள்ளொளி யாலே யுணர்ந்தது
சென்ற பிராணிகள் சிந்தையில் வேண்டிய
துன்றிடு ஞானங்கள் தோன்றிடுந் தானே.

விளக்கம்:

பாடல் #1236 இல் உள்ளபடி சாதகருக்குள் எப்போதும் பொருந்தி நட்சத்திரம் போன்ற பேரொளிப் பிழம்பாகவும் நிற்கின்ற இறைவியானவள் அவரின் சக்திக்குத் தகுதியான ஆபரணங்களை சூடிக்கொண்டு இருக்கின்றாள். அவளோடு உண்மையான ஞானத்தில் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் சாதகர்கள் தங்களின் உள்ளுக்குள் இருக்கும் இறை ஒளியின் மூலம் அவளை முழுவதுமாக உணர்ந்து கொண்டு வீற்றிருக்கும் போது இதுவரை உலகத்தைக் கடந்து சென்ற ஆன்மாக்களின் எண்ணத்தில் அவர்கள் வேண்டிக் கொண்ட வேண்டுகோள்கள் அனைத்தும் வந்து சேரும். அப்போது அவர்களின் வேண்டுகோள்களுக்கு பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும்.

பாடல் #1238

பாடல் #1238: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தோன்றிடும் வேண்டுரு வாகிய தூய்நெறி
ஈன்றிடு மாங்கவ ளெய்திய பல்கலை
மான்றரு கண்ணியும் மாரனும் வந்தெதிர்
சான்றது வாகுவர் தாமவ ளாயுமே.

விளக்கம்:

பாடல் #1237 இல் உள்ளபடி உலகத்தை கடந்து சென்ற ஆன்மாக்களின் வேண்டுகோள்களுக்கு பொருத்தமான அருளை வழங்குவதற்குத் தேவையான ஞானங்கள் அனைத்தும் சாதகருக்குள் தானாகவே தோன்றிவிடும் போது அப்படி வேண்டிக்கொண்ட ஆன்மாக்களின் விருப்பமான தெய்வத்தின் உருவமாகவே சாதகரும் மாறி அவர்கள் வேண்டிக் கொண்டதை அடைவதற்கான தூய்மையான வழியைக் கொடுத்து அருளும் இறைவியாகவே வீற்றிருந்து பலவிதமான செயல்களைச் செய்து அருளுகின்றார். அப்படி அருளுகின்ற போது அழகிய மானைப் போன்ற கண்களைக் கொண்ட இறைவியும் பேரழகனாகிய இறைவனும் ஒன்றாக அவருக்கு எதிரில் வந்து வேண்டிக்கொண்ட ஆன்மாக்களுக்கு அருள் புரியும் போது இறைவியாகவே ஆகிவிட்ட சாதகரும் அதற்கு சாட்சியாக வீற்றிருக்கின்றார்.

பாடல் #1239

பாடல் #1239: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆயு மறிவுங் கடந்தணு வாரணி
மாயம தாகி மதோமகி யாயிடுஞ்
சேய அரிவை சிவானந்த சுந்தரி
நேயமது ஆய்நெறி யாகிநின் றாளே.

விளக்கம்:

பாடல் #1238 இல் உள்ளபடி இறைவியாகவே ஆகிவிட்ட சாதகர்கள் நுண்ணியதாக அறியும் அறிவையும் தாண்டிய நிலையில் அணுவுக்குள் அணுவாகவும் மாயையாகவும் ஆகி நின்று அனைத்திற்கும் மேன்மையான பெருமையை உடையவளாகவும் இருக்கின்றாள். சிவந்த நிறத்தோடு என்றும் இளமையுடன் பேரானந்தத்திற்கும் மேலான சிவானந்தமாகவே இருக்கின்ற அவளே பேரழகுடன் பேரன்பின் வடிவமாகவே ஆகி சாதகர் செல்கின்ற மேன்மையான வழியாகவும் ஆகி நிற்கின்றாள்.

பாடல் #1240

பாடல் #1240: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நெறியது வாய்நின்ற நேரிழை யாளைப்
பிறிவது செய்யாது பிஞ்ஞக னோடுங்
குறியது கூடிக் குறிக்கொண்டு நோக்கும்
அறிவொடு மாங்கே யடங்கிட லாமே.

விளக்கம்:

பாடல் #1239 இல் உள்ளபடி சாதகர்கள் செல்கின்ற மேன்மையான வழியாகவே ஆகி அவரது வழிகளுக்குத் தகுதியான அணிகலன்களை அணிந்து கொண்டு நிற்கின்ற இறைவியை எப்போதும் இறைவனை விட்டுத் தனியாக பிரித்து வைத்து நினைக்காமல் பிண்ணிய சடை முடியில் கங்கையையும் பிறை நிலாவையும் சூடியிருக்கும் இறைவனுடனே இறைவியை ஒன்றாக சேர்த்து வைத்து எப்போது அதை நினைப்பதையே குறிக்கோளாகக் கொண்டு தமது எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் அவர்களின் மேல் வைத்து தியானிக்கும் சாதகர்கள் அம்மை அப்பராகிய அவர்கள் இருவரோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருப்பார்கள்.

பாடல் #1241

பாடல் #1241: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

ஆமயன் மாலர னீசன்மா லாங்கதி
ஓமய மாகிய வொன்பது மொன்றிடத்
தேமய னாளுந் தெனாதென வென்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.

விளக்கம்:

பாடல் #1240 இல் உள்ளபடி அம்மை அப்பராகிய இறைவன் இறைவியோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருக்கின்ற சாதகர்கள் தமக்குள் இருக்கின்ற ஒன்பது மண்டலங்களிலும் ஓங்கார மந்திரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட ஒன்பது தெய்வங்களோடும் தாமும் சேர்ந்து ஓங்காரத்தின் நாதத் தன்மை பெற்றுவிடுவார். அதன் பிறகு தனக்குப் பிடித்த வகையான தேன் இருக்கின்ற பூவைத் தேடி மொய்த்து அதிலிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பத்தில் திளைத்திருக்கும் தேனீக்களைப் போல சாதகரும் தமக்குக் கிடைக்கப் பெற்ற ஓங்காரத்தின் நாதத் தன்மையில் கிடைக்கும் பேரின்பத்திலேயே திளைத்து இருப்பார்.

சாதகருக்குள் இருக்கின்ற ஒன்பது மண்டலங்கள்:

  1. மூலாதாரம் – சூரிய மண்டலம்
  2. சுவாதிஷ்டானம் – பிரம்மா
  3. மணிபூரகம் – திருமால்
  4. அனாகதம் – உருத்திரன்
  5. விசுக்தி – மகேஸ்வரன்
  6. ஆக்ஞா – சதாசிவம்
  7. சகஸ்ராரம் – பரா
  8. துவாதசாந்த வெளி (தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் தூரத்தில் உள்ளது) – பரை
  9. சந்திர மண்டலம் (துவாதசாந்த வெளிக்கு மேலே ஆகாயத்தில் உள்ளது) – பராபரை

பாடல் #1242

பாடல் #1242: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

வந்தடி போற்றுவர் வானவர் தானவர்
இந்து முதலாக எண்டிசை யோர்களுங்
கொந்தணி யுங்குழ லாளொடு கோனையும்
வந்தனை செய்யும் வழிநவில் வீரே.

விளக்கம்:

பாடல் #1241 இல் உள்ளபடி ஓங்காரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட சாதகரைத் தேடி வந்து அவரது திருவடியைப் போற்றி வணங்கி நின்று தேவர்களும் அசுரர்களும் இந்திரன் முதலாக எட்டு திசைக்கும் தலைவர்களாக இருக்கின்றவர்களும் சாதகர் தமக்குள்ளேயே நறுமணம் மிக்க மலர்களைச் சூடிக்கொண்டு இருக்கும் அழகிய கூந்தலைக் உடைய இறைவியையும் அவளோடு ஒன்றாகச் சேர்ந்து அனைத்திற்கும் அரசனாக இருக்கின்ற இறைவனையும் தமது வழிபாட்டின் மூலமே சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியை சொல்லி அருளுமாறு வேண்டிக் கொள்வார்கள்.

எட்டு திசைக்கும் தலைவர்கள் இருப்பவர்கள்:

பாடல் #69 மற்றும் #70 இல் உள்ளபடி முதல் நான்கு திசைகளுக்கும் தலைவர்களாக இருப்பவர்கள்:

  1. இந்திரன்
  2. சோமன்
  3. பிரம்மன்
  4. உருத்திரன்

மற்ற நான்கு திசைகளுக்கு தலைவர்களாக இருப்பவர்கள்:

  1. எமதருமன்
  2. குபேரன்
  3. வருணதேவன்
  4. வாயுதேவன்

பாடல் #1243

பாடல் #1243: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

நவிற்றுநன் மந்திரம் நன்மலர் தூபங்
கவற்றிய கந்தங் கவர்ந்தெரி தீபம்
பயிற்று முலகினிற் பார்ப்பதி பூசை
அவிக்கொண்ட சோதிக்கோர் அர்ச்சனை தானே.

விளக்கம்:

பாடல் #1242 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் சாதகர் அடைந்ததைப் போலவே தாங்களும் சென்று அடைவதற்கான வழியைச் சொல்லி அருளுமாறு வேண்டிக் கொண்டவர்களுக்கு அவர் கூறிய வழியாவது இறைவனை நினைத்து அவரின் நன்மையான மந்திரங்களை ஓதி நறுமணம் மிக்க மலர்களைத் தூவி தூய்மையான வாசனை மிக்க தூபத்தைக் காட்டி மனதையும் ஐந்து புலன்களையும் அடக்கி வைத்து எண்ணங்கள் முழுவதையும் தூய்மைப் படுத்தி கவர்ந்து கொள்கின்ற தூய்மையான நெய்யில் எரிகின்ற தீபத்தை ஏற்றி வைத்து வேத ஆகமங்கள் அருளிய முறைப்படி இந்த உலக வாழ்க்கையிலேயே அனைத்து உலகங்களுக்கும் தலைவனாகிய இறைவனுக்கு பூசை செய்து அனைத்து உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கின்ற அந்த இறைவனுக்கு அர்ச்சனை செய்யுங்கள். இறைவனையும் இறைவியையும் சென்று அடையும் வழி இதுவே என்று அருளுகின்றார்.

பாடல் #1244

பாடல் #1244: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)

தாங்கி யுலகிற் தரித்த பராபரன்
ஓங்கிய காலத் தொருவ னுலப்பிலி
பூங்கிளி தங்கும் புரிகுழ லாளன்று
பாங்குட னேற்பப் பராசத்தி போற்றே.

விளக்கம்:

பாடல் #1243 இல் உள்ளபடி உயிர்களுக்குள்ளும் சோதியாக வீற்றிருக்கின்ற பரம்பொருளான இறைவன் அண்ட சராசரங்களையும் தாங்கி நின்று அதிலிருக்கும் அனைத்து உலகங்களாகவும் அதிலிருக்கும் அனைத்து பொருட்களாகவும் இருக்கின்றான். அனைத்தும் அழிந்து போகின்ற பேரூழிக் காலத்திலும் கூட தான் ஒருவன் மட்டும் எப்போதும் அழியாமல் இருக்கின்றான். பசுமையான கிளியை தனது திருக்கையில் ஏந்திக் கொண்டு சுருண்ட அழகிய கூந்தலை உடைய இறைவியானவள் அப்போதும் இறைவனின் மேன்மையான நிலைக்கு ஏற்பவே தாமும் அவனுடன் சரிசமமான பாகமாகக் கலந்து நின்று இருவரும் சேர்ந்து இருக்கின்ற தன்மையில் பராசக்தியாக இருக்கின்றாள். ஒன்றாகச் சேர்ந்து இருக்கும் இவர்கள் இருவரையும் போற்றி வழிபடுங்கள்.