பாடல் #1246: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
விளங்கொளி யாய விரிசுடர் மாலை
துளங்கு பராசத்தி தூங்கிருள் நீங்கக்
களங்கொள் மணியுடன் காம வினோதம்
உளங்கொ ளிலம்பிய மொன்று தொடரே.
விளக்கம்:
பாடல் #1245 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள் விளங்கிக் கொண்ட பேரொளியாக இருக்கின்ற இறைவியானவள் தனது கழுத்தில் எப்போதும் பிரகாசமாக ஒளி வீசுகின்ற மணி மாலையை அணிந்திருக்கின்றாள். உயிர்களுக்குள் மிகுதியாக இருக்கின்ற ஆணவ மலம் நீங்கி அவர்கள் தாம் யார் என்பதை உண்மையாக உணர வேண்டும் என்பதற்காக நீல நிறக் கழுத்துடன் இருக்கின்ற இறைவனோடு மிகுந்த அன்பு கொண்டு அவருடன் சேர்ந்து இருந்து ஆணவ மலங்களை நீக்கி அருளுகின்றாள். கிடைப்பதற்கு அரிய அந்த பெரும் பேறை நீங்களும் அடைய வேண்டும் என்றால் இறைவியோடு தியானத்தில் எப்போதும் ஒன்றி இருந்து அவளைத் தொடர்ந்து கொண்டே இருங்கள்.