பாடல் #1234: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
சத்தியி னோடு சயம்புவும் நேர்படில்
வித்தது வின்றியே யெல்லாம் விளைந்தன
அத்தகை யாகிய ஐம்பத் தொருவருஞ்
சித்துஅது மேவித் திருந்திடு வாரே.
விளக்கம்:
பாடல் #1233 இல் உள்ளபடி இறைவனையும் இறைவியையும் முதன்மையாகக் கொண்டு அவர்களைச் சார்ந்து இருக்கின்ற சாதகர்கள் சத்தியத்தின் உருவமாக இருக்கின்ற இறைவியோடும் தாமாகவே தோன்றி எப்போதும் இருக்கின்ற இறைவனோடும் தாமும் ஒன்றாகச் சேர்ந்து இருக்கின்ற உண்மையான ஞானத்தை உணர்ந்து விட்டால் விதை போட்டால் பயிர் வளரும் என்கிற உலக நியதிக்கு எதிராக விதை போடாமலே அனைத்து பயிர்களும் விளைந்து விடும் அதிசயம் போல அனைத்து ஞானங்களும் அவர் முயற்சி செய்யாமலேயே இறையருளால் அவருக்கு கிடைக்கப் பெறும். அது போலவே பாடல் #1224 இல் உள்ளபடி அவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட ஐம்பத்தோரு அட்சரங்களும் அவற்றுக்கு அதிபதியான தேவர்களும் அவரின் சித்தத்தில் இருக்கும் சிவத்தோடு கலந்து அவரின் சிந்தனைக்குள் இருக்கும் அனைத்து மும்மலங்களால் ஆன அனைத்து எண்ணங்களும் நீங்கி மொத்தமும் நன்மையாகவே அவர் மாறிவிடுவார்.