பாடல் #1230: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
சத்தியு நானுஞ் சயம்புவு மல்லது
முத்தியை யாரும் முதலறி வாரில்லை
அத்திமேல் வித்திடி லத்தி பழுத்தக்கால்
மத்தியி லேற வழியது வாமே.
விளக்கம்:
பாடல் #1229 இல் உள்ளபடி உண்மையான ஞான வழியில் சென்று அடையும் அசையும் சக்தியாகிய இறைவியும் ஆன்மாவும் தானாகவே இருக்கின்ற அசையா சக்தியாகிய இறைவனும் இல்லாமல் முக்திக்கான ஆரம்பம் எது என்பதை அறிந்தவர்கள் வேறு யாரும் இல்லை. மூலாதார சக்தியின் மீது மூச்சுக்காற்றைச் செலுத்தி தியானம் செய்தால் அந்த மூலாதார சக்தியானது சக்தியூட்டம் பெற்று அதன் பிறகு மூச்சுக்காற்றின் மூலம் உடலின் நடுவில் இருக்கும் சுழுமுனை நாடித் துளை வழியே மேலே ஏறிச் சென்று சகஸ்ரதளத்தை அடைவதே முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் வழியாகும்.
கருத்து:
முக்திக்கான ஆரம்ப நிலையை அறிந்து கொள்ள ஒன்று இறைவியைத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது ஆன்மாவாக இருக்கும் தான் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது அசையா சக்தியாக இருக்கின்ற இறைவனைத் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த மூன்று வழிகளிலும் தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இருக்கும் இன்னொரு வழியே குண்டலினி யோகம். அதையும் அறிந்தவர்கள் யாரும் இல்லை. அத்திப் பழத்தின் தன்மையில் அது பூப்பதையோ காய்ப்பதையோ யாரும் பார்க்க முடியாது அது பழுத்த பிறகே தெரிய வரும். அதுபோலவே மூலாதார சக்தியானது சக்தியூட்டம் பெறுவதையோ அது மேலேறிச் செல்வதையோ யாரும் அறிந்து கொள்ள முடியாது ஆனால் அது சகஸ்ரதளத்தை அடைந்த பிறகு அங்கிருக்கும் இறை சக்தியை உணர்ந்து கொள்ள முடியும் அதுவே முக்திக்கான ஆரம்பத்தை அறிந்து கொள்ளும் வழியாகும்.