பாடல் #1218: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
நாதனும் நாலொன் பதின்மருங் கூடிநின்
றோதிடுங் கூட்டங்க ளோரைந் துளஅவை
வேதனு மீரொன் பதின்மரு மேவிநின்
றாதியு மந்தமு மாகிநின் றாளே.
விளக்கம்:
பாடல் #1217 இல் உள்ளபடி இறைவியின் சரிபாகமாக இருக்கின்ற இறைவனின் அம்சமாக இருக்கும் சாதகரின் ஆன்மாவோடு 36 தத்துவங்களும் இனிமையுடன் பெருகி ஒன்றாகக் கூடி சாதகருக்குள் வீற்றிருந்து இறைவனை வணங்குவதற்கு உதவுகின்ற ஐந்து புலன்களாகவும் உடலாகவும் இருக்கின்றன. அதன் பிறகு சாதகரின் உடலே பிரம்மனாகவும் 18 விதமான தேவ கணங்களாகவும் இனிமையுடன் பெருகிப் பரவி வீற்றிருந்து இறைவியைத் துதிக்கும் போது அவள் சாதகருக்குள் முதலாகவும் முடிவாகவும் வீற்றிருந்து அருளுவாள்.
கருத்து: சாதகருக்குள்ளிருக்கும் 36 தத்துவங்களாகவும் ஐந்து புலன்களாகவும் பிரம்மனாகிய உடலாகவும் 18 விதமான தேவ கணங்களாகவும் இறைவியே இருப்பதை இந்தப் பாடலில் அறிந்து கொள்ளலாம்.
திருமந்திரம் – பாடல் #467 ல் முப்பத்தாறு தத்துவங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
18 விதமான தேவ கணங்கள்:
- சுரர் – உலக இயக்கத்திற்கு உதவும் தேவ லோகத்து தேவர்கள்.
- சித்தர் – இறை நிலையில் இருப்பவர்கள்.
- அசுரர் – அசுரர்கள்.
- தைத்தியர் – அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்கள்.
- கருடர் – கருடர்கள்.
- கின்னரர் – நடனம் ஆடுவதில் வல்லவர்கள்.
- நிருதர் – அரக்கர்கள்.
- கிம்புருடர் – யாளி என்று அழைக்கப்படும் சிங்க முகமும் மனித உருவமும் கொண்ட கணங்கள்.
- காந்தர்வர் – கந்தவர்கள் (தேவர்களுக்கு அடுத்த நிலை).
- இயக்கர் – யட்சர்கள்.
- விஞ்சையர் – கலைகளில் பெரும் ஞானம் உடையவர்கள்.
- பூதர் – சிவனுக்கு சேவர்களாக இருக்கும் பூத கணங்கள்.
- பிசாசர் – கொடூரமான கோபக் குணத்துடன் வடிவமற்றவர்கள்.
- அந்தரர் – சுவர்க்க லோகத்தில் இருக்கும் தேவர்கள்.
- யோகர் – ரிஷிகளும் முனிவர்களும்.
- உரகர் – நாகர்கள்.
- ஆகாய வாசர் – விண்ணுலக வாசிகள்.
- விண்மீன் நிறைகணம் – நட்சத்திர மண்டலங்களில் நிறைந்திருக்கும் கணங்கள்.