பாடல் #1204: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
எய்திட லாகு மிருவினை யின்பயன்
கொய்தளிர் மேனிக் குமரி குலாங்கன்னி
மைதவழ் கண்ணிநன் மாதுரி கையொடு
கைதவ மின்றி கருத்துறும் வாறே.
விளக்கம்:
பாடல் #1203 இல் உள்ளபடி ஒரு கண நேரத்தில் இறைவனையும் அவனது அம்சமான வேதங்களையும் உணர்ந்து கொண்ட சாதகர்கள் தங்களின் நல் வினை தீ வினை ஆகிய இரண்டு விதமான வினைகளையும் நீங்கப் பெற்று பார்த்தவுடன் கொய்ய நினைக்கும் அழகிய குருத்து இலைகளைக் கொண்ட இளம் கொடி போன்ற திருமேனியை உடையவளும் கன்னித் தன்மையோடு இருக்கும் பேரின்ப அமிழ்தத்தைக் கொடுக்கும் அழகிய திருமுலைகளைக் கொண்டு என்றும் இளமையாக இருப்பவளும் கருமையான மையைத் தீட்டியிருக்கும் பேரழகுடன் அருளுகின்ற கண்களை உடையவளும் நன்மையான இனிமையைக் கொடுக்கின்ற திருக்கரங்களை உடையவளும் ஆகிய இறைவியின் எண்ணங்களும் தமது எண்ணங்களும் ஒன்றாகப் பெற்று மாய எண்ணங்கள் எதுவும் இன்றி இருக்கும் வழியை அடைந்து விடுவார்கள்.
கருத்து:
இறைவனையும் வேதங்களையும் உணரப் பெற்ற சாதகர்கள் தங்களின் இரண்டு விதமான வினைகளையும் நீங்கப் பெற்று இறைவியைப் போன்ற மென்மையான திருமேனியைப் பெற்று என்றும் இளமையுடன் இறைவியின் அருளால் பெற்ற பேரின்பத்தில் திளைத்து இருந்து இறைவியைப் போலவே தமது கண்களினால் அருளைக் கொடுக்கின்ற நிலையை அடைந்து தம்மை நாடி வந்தவர்களுக்கு அபயம் கொடுக்கின்ற திருக்கரங்களைப் பெற்று தமது மாயையான எண்ணங்கள் நீங்கி இறைவியின் எண்ணங்களும் தமது எண்ணங்களும் வேறில்லை என்ற நிலை பெற்று வீற்றிருப்பார்கள்.