பாடல் #1203: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
உறைபதி தோறும் முறைமுறை மேவி
நறைகமழ் கோதையை நாடொறு நண்ணி
மறையுட னேநிற்கும் மற்றுள்ள நான்கும்
இறைதினைப் போதிடி லெய்திட லாமே.
விளக்கம்:
பாடல் #1202 இல் உள்ளபடி இறைவி தமக்கும் மிகவும் விருப்பமான கோயிலாகக் கொண்டிருக்கும் சாதகருடன் தொடர்ந்து பலகாலம் முறைப்படி அவரது தன்மையிலேயே கலந்து நிற்கின்ற இறைவியானவள் நறுமணம் கமழ்கின்ற மலர்களைச் சூடியிருக்கும் பேரழகு வாய்ந்த கூந்தலை உடையவளாக அவருக்குள்ளிருந்து எப்போதும் நறுமணம் வீசிக்கொண்டு சேர்ந்தே இருக்கின்றாள். இப்படி இருக்கின்ற இறைவியோடு சமாதி நிலையில் பலகாலம் இருந்தால் இறைவனுடன் அவனது அம்சமாகவும் அவனுக்கு சரிசமமாகவும் இருக்கின்ற நான்கு வேதங்களையும் இறைவனின் உண்மை ஞானத்தையும் ஒரு கண நேரத்தில் பெற்று உணர்ந்து விடலாம்.
கருத்து:
சமாதி நிலையை அடைந்த சாதகருக்குள்ளிருந்து இறைவியானவள் நறுமணத்தை வீசிக்கொண்டே இருக்கின்றாள். இந்த நிலையில் பலகாலம் இருப்பவர்களுக்கு ஒரு கண நேரத்தில் இறைவனையும் அவரது அம்சமாக இருக்கின்ற வேங்களையும் உணர்ந்து கொள்ள முடியும்.

ஐயா வணக்கம்
எனக்கு திருமூலர் திருமந்திரம் பாடல்கள்
இறைவனக்கம் தொடங்கி முழுவதும் வேண்டும்
குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்
இப்படிக்கு
மு.அசோக்குமார்
ஐயா வணக்கம் நன்று திருமந்திரம் தினந்தோறும் ஒரு பாடல் வீதமாக விளக்கம் எழுதி பதிவேற்றி வருகிறோம். இன்னும் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. முழுமையாக தங்களுக்கு வேண்டுமென்றால் பலர் திருமந்திரத்திற்கு விளக்கங்கள் எழுதி புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார்கள். ஆன்லைனில் புத்தகங்கள் கிடைக்கிறது வாங்கிப் பயன்பெறலாம்