பாடல் #1178: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
வாயு மனமுங் கடந்த மனோன்மணி
பேயுங் கணமும் பெரிதுடைப் பெண்பிள்ளை
ஆயு மறிவுங் கடந்த அரனுக்குத்
தாயு மகளுநல் தாரமு மாமே.
விளக்கம்:
பாடல் #1177 இல் உள்ளபடி சாதகர்கள் தமக்குள்ளே தேடி அறிந்து கொண்ட இறைவியானவள் இறைவனுடன் எப்படி சேர்ந்து இருக்கின்றாள் என்பதை இந்தப் பாடல் அறிந்து கொள்ளலாம். வாக்கால் சொல்ல முடியாதவளும் எண்ணங்களால் எளிதில் கற்பனை செய்து பார்க்க முடியாதவளும் ஆகிய மனோன்மணி எனும் இறைவி தனது பெண் தன்மையில் என்றும் இளமையுடன் இருந்து உலகங்களின் இயக்கம் நடைபெறுவதற்கு எண்ணங்களோடு இருக்கின்ற ஆன்மாக்களையும் தேவ கணங்களையும் அதிகமாக வைத்து இயக்குகின்றாள். கல்வி அறிவால் எவ்வளவு ஆராய்ந்தாலும் உணர்ந்து கொள்ள முடியாத இறைவனுக்கு அவளே தாயாகவும் மகளாகவும் என்றும் நன்மை தரும் துணைவியாகவும் இருக்கின்றாள்.
குறிப்பு: உலக இயக்கம் நடைபெறுவதற்கு இறைவியின் எண்ணத்திற்கு ஏற்ப ஐந்து பூதங்களையும் கணங்கள் செயல் படுத்துகின்றது. இறைவனிடமிருந்து தன் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வதற்காக பிரிந்து வந்த எண்ணங்களுடைய ஆன்மா தனது ஆசைகளையும் அதனால் சேரும் வினைகளையும் பிறவி எடுத்து தீர்த்துக் கொள்கிறது. இதுவே இங்கு பேய் என்று குறிப்பிடப் படுகின்றது.
உப குறிப்பு: சாதகர் தமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்ளும் இறைவியானவள் முதல் நிலையில் தாயாக இருந்து சாதகரின் மேல் அன்பு செலுத்துகிறாள். இரண்டாவது நிலையில் சாதகர் தாம் உணர்ந்த இறைவியின் மேல் தன் மகளைப் போல அன்பு செலுத்துகிறார். மூன்றாவது நிலையில் இறைவியும் சாதகரும் சரிசமமாக ஒருவரோடு ஒருவர் அன்பு செலுத்துகிறார்கள்.