பாடல் #1173: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
தேர்ந்தெழு மேலாஞ் சிவனங்கி யோடுற
வார்ந்தெழு மாயையு மந்தம தாய்நிற்கும்
ஓர்ந்தெழு விந்துவும் நாதமும் ஓங்கிடக்
கூர்ந்தெழு கின்றனள் கோல்வளை தானே.
விளக்கம்:
பாடல் #1172 இல் உள்ளபடி சாதகர் தமக்குள் ஆராய்ந்து அறிந்து கொண்ட யோக ஓளியானது அதற்கும் மேலான அக்னியாக இருக்கும் இறைவனின் ஒளி உருவத்தோடு சேர்ந்து பரவும் போது அந்த பக்குவப்பட்ட சாதகரின் உள்ளிருந்து வெளிப்படுகின்ற அனைத்து விதமான மாயைகளையும் இறைவனின் அக்னி உருவமே சுட்டு எரித்து அழித்து விடுகின்றது. அதன் பிறகு உத்வேகத்துடன் சாதகருக்குள்ளிருந்து எழுகின்ற வெளிச்சமும் சத்தமும் மிகவும் உச்ச நிலையை அடையும் போது அதிலிருந்து மிகுதியாக வெளிப்படுகின்றாள் அடியவர்களின் எண்ணத்தை தம்மேல் இழுக்கின்ற அழகிய வளையல்களை அணிந்த இறைவி.