பாடல் #1171: நான்காம் தந்திரம் – 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
இதுவப் பெருந்தகை யெம்பெரு மானும்
பொதுவக் கலவியும் போகமு மாகி
மதுவக் குழலி மனோன்மணி மங்கை
அதுவக் கலவியுள் ஆயுழி யோகமே.
விளக்கம்:
பாடல் #1170 இல் உள்ளபடி ஒரே பொருளாக இருக்கின்ற எமக்குள் மிகவும் பெருமையை உடைய எமது தலைவனாகிய இறைவனும் யாமும் ஒன்றாகக் கலந்து இருக்கின்ற நிலையிலும் அதனால் கிடைக்கின்ற பேரின்பத்திலும் இருக்கும் போது மாயையாகிய மயக்கத்தை அளித்து தம்மை நாடும் அடியவர்களை கவர்ந்து இழுக்கும் நறுமணம் வீசுகின்ற மலர்களைச் சூடியிருக்கும் அழகிய கூந்தலையுடைய மனோன்மணியாகிய என்றும் இளமையான இறைவியும் எம்மோடு கலந்து ஒரே பொருளாக இருக்கும் விதத்தை எமக்குள் ஆராய்ந்து உணர்ந்து கொள்வது ஆயுழி எனும் மாபெரும் யோகமாகும்.
திருச்சிற்றம்பலம்,
அருமையான தமிழ்ப்பணி மற்றும் சைவப்பணியாற்றி வருகிறீர்கள். எமது பணிவான பாராட்டுதல்கள்.
பாடல்களை நல்ல வளமான குரலில் பாடவைத்தும் பதிவிட்டிருக்கிறீர்கள். அருமை.
இந்தப் பாடலின் இரண்டாவது வரியில் உள்ள ‘கலவி’ என்ற சொல் ‘கல்வி’ எனப் பாடப்படுகிறது. இதனைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
அன்பன்
மா அருச்சுனமணி
இந்தப்பாடலில் வரும் வார்த்தை கலவி தான் ஜயா கல்வி இல்லை. கலவி போல் இறைவன் எம்முடன் கலந்திருந்து பேரின்பத்தை கொடுப்பதை கூறிப்பிடுகிறார்.