பாடல் #978: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
ஐந்து கலையில் அகராதி தன்னிலே
வந்த நகராதி மாற்றி மகராதி
நந்தியை மூலத்தே நாடிப் பரையொடுஞ்
சந்திசெய் வார்கட்குச் சடங்கில்லை தானே.
விளக்கம்:
திருவம்பலச் சக்கரத்திலுள்ள ஐந்து கலைகளின் ஆதாரமாக இருக்கின்ற ‘அ’ எழுத்திலிருந்து வந்த ‘ஓம்’ எழுத்தை முதலாகக் கொண்ட ‘நமசிவாய’ மந்திரத்தை மாற்றி ‘சிவாயநம’ எனும் மந்திரமாக்கி பரிபூரணமாக குருவை நாடி சிவசக்தியை அடைந்தவர்களுக்கு தினமும் செய்யும் சடங்குகள் எதுவும் தேவையில்லை.
திருவம்பலச் சக்கரத்திலுள்ள ஐந்து கலைகள்:
- நிவர்த்தி = பலன் கொடுத்தல்
- பிரதிட்டை = மந்திரத்தை நிலை நிறுத்துதல்
- வித்தை = சக்தியைப் பெருக்குதல்
- சாந்தி = அமைதியை உண்டாக்குதல்
- சாந்தியாதீதம் = சத்தம் / ஒலி
குறிப்பு: கலைகள் என்பது என்னவெனில் திருவம்பலச் சக்கரம் எப்படி வேலை செய்கிறது என்பதை குறிப்பதாகும்.