பாடல் #929: நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் (ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)
இயலுமிம் மந்திரம் எய்தும் வழியின்
செயலும் அறியத் தெளிவிக்கு நாதன்
புயலும் புனலும் பொருந்தங்கி மண்விண்
முயலும் எழுத்தின் முன்னா இருந்ததே.
விளக்கம்:
திருவம்பலச் சக்கரத்தில் மந்திரங்களை பாடல் #924 முதல் #928 வரை சொல்லியபடி வரையும் வழியையும் பாடல் #916, #917 #918 வரை சொல்லியபடி வழிபட வேண்டிய முறைகளையும் முயற்சி செய்பவர்களுக்கு இறைவன் குருவாக நின்று அவர்களது அறிவு தெளிவு பெறும்படி செய்வான். காற்று, நீர், நெருப்பு, நிலம், ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் பீஜ மந்திரங்களாகிய யம், வம், ரம், லம், ஹம் ஆகியவற்றை சக்கரத்தில் வரையப்பட்டுள்ள மந்திரங்களுக்கு முன்பாக சேர்த்து வழிபட வேண்டும்.
திருவம்பலச் சக்கரத்தில் உள்ள மந்திரங்களுக்கு முன் பஞ்ச பூத பீஜங்களை சேர்க்கும் முறை.
- நிலம் = லம் யநமவாசி
- நீர் = வம் வாயநமசி
- நெருப்பு = ரம் நமசிவாய
- வாயு = யம் மசிவாயந
- ஆகாயம் = ஹம் சிவாயநம