பாடல் #1110: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
ஆருயி ராயு மருந்தவப் பெண்பிள்ளை
காரிய கோதையங் காரணி நாரணி
ஊரு முயிரு முலகு மொடுங்கிடுங்
கோரியென் னுள்ளம் குலாவிநின் றாளே.
விளக்கம்:
வயிரவி தேவியானவள் செய்வதற்கு மிகவும் அரியதான தவங்களை ஆராய்ந்து செய்கின்ற யோகியர்களுக்கு மட்டுமே ஆரம்ப காலத்தில் இளமையுடன் வெளிப்படுவாள். அவளே அனைத்தையும் செயல்படுத்தும் காரியமாகவும் அந்த செயல்களுக்கான காரணமாகிய இறைவனோடு சேர்ந்து இருந்து அனைத்து செயல்களுக்கும் சக்தியை கொடுப்பவளாகவும் இருக்கின்றாள். அண்ட சராசரங்களிலுள்ள அனைத்து உலகங்களும் அதில் வாழ்கின்ற அனைத்து உயிர்களும் அழிகின்ற காலத்தில் சென்று சேருகின்ற இடமாக அவளே இருக்கின்றாள். ஊழிக் காலத்தில் கோர உருவம் கொண்டு இருக்கும் அவளே எமது உள்ளத்திற்குள் சாந்த சொரூபியாய் மிகவும் மகிழ்ச்சியுடன் வீற்றிருக்கின்றாள்.
கருத்து:
அரிய தவங்களை செய்த யோகியர்களுக்கு கிடைக்கும் வயிரவி தேவியானவள் உலகத்தில் நிகழும் அனைத்து செயல்களுக்கும் காரண காரியமாக இறைவனுடன் சேர்ந்து இருக்கின்றாள். உலகங்களும் அதிலுள்ள உயிர்களும் ஊழிக்காலத்தின் சென்று சேரும் இடமாகவும் இருக்கின்றாள். இவளே எமது உள்ளத்தில் சாந்த சொரூபமாய் இருக்கின்றாள்.