பாடல் #1102: நான்காம் தந்திரம் – 6. வயிரவி மந்திரம் (பைரவரின் சக்தியான பைரவியின் மந்திரம்)
கொண்டனள் கோலங் கோடியவ னேகங்கள்
கண்டன ளெண்ணென் கலையின் கணமாலை
விண்டனள் மேலை விரிகதிர் மூன்றையுந்
தண்டலை மேல்நின்ற தையல்நல் லாளே.
விளக்கம்:
பாடல் #1101 இல் உள்ளபடி எம்மை உய்யும் படி செய்து ஆட்கொண்ட சோதியான வயிரவி உயிர்களும் உய்வதற்காக அவரவர் மனப் பக்குவத்துக்கு ஏற்ப பல கோடித் தோற்றங்களுடன் உயிர்களின் உள்ளுக்குள்ளே இருக்கின்றாள். உயிர்களின் அறியாமையை நீக்குவதற்கு அறுபத்து நான்கு கலைகளையும் அருளி அவற்றின் உச்சமாகவும் இருக்கின்றாள். உயிர்களின் வெளிப்புற இருளை நீக்குவுதற்கு ஆகாயத்தில் சூரியன், சந்திரன், மூலாதார அக்னி ஆகிய மூன்று விதமான ஒளிகளை அருளினாள். சாதகர்களின் தலை உச்சிக்கு மேல் வீற்றிருந்து உலகத்தை அவரோடு பிணைத்து நன்மை புரிபவளாக இருக்கின்றாள்.
கருத்து: வயிரவியானவள் உயிர்களின் எண்ணங்களுக்கு ஏற்ற உருவத்துடன் அவர்களின் உள்ளுக்குள்ளே இருக்கின்றாள். சாதகர்களின் உள்ளே இருக்கும் அறியாமையாகிய இருளை அறுபத்து நான்கு கலைகளின் மூலம் நீக்கி வெளியே இருக்கும் இருளை சூரிய சந்திர அக்னி ஒளிகளின் மூலம் நீக்கி உலகத்தோடு அவரை பிணைத்து (ஒன்றோடு ஒன்று கலந்து) நன்மை புரிகின்றாள் வயிரவி.