பாடல் #708: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
மூல முதல்வேதா மாலரன் முன்னிற்கக்
கோலிய ஐம்முகன் கூறப் பரவிந்து
சாலப் பரநாதம் விந்துத் தனிநாதம்
பாலித்த சத்தி பரைபரன் பாதமே.
விளக்கம்:
மூலாதாரத்தில் வீற்றிருந்து வேதங்களை ஓதிக்கொண்டே இருக்கின்ற பிரம்மனும் சுவாதிட்டானத்தில் வீற்றிருக்கின்ற திருமாலும் மணிப்பூரகத்தில் வீற்றிருக்கின்ற உருத்திரனும் அநாகதத்தில் வீற்றிருக்கின்ற மகேஸ்வரனும் விசுத்தியில் வீற்றிருக்கின்ற சதாசிவனும் ஆக்ஞையில் வீற்றிருக்கின்ற ஒளியும் சகஸ்ரரத்தில் வீற்றிருக்கின்ற ஒலியும் அதைத்தாண்டி உள் நாக்கிற்கு மேலே அமிர்தம் கொட்டுகின்ற இடத்தில் வீற்றிருக்கும் பரஒளியும் தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் உயரத்தில் உள்ள துவாதசாந்த வெளியில் வீற்றிருக்கும் பரஒலியும் ஆகிய இந்த ஒன்பதுவிதமான சக்திகளும் அசையா சக்தி (பரன்-சிவம்) அசையும் சக்தி (பரை-சக்தி) என்று இரண்டாக விளங்கும் பராபரையின் திருவடிகளே ஆகும்.
கருத்து: உயிர்களின் உடலின் ஆறு ஆதாரச் சக்கரங்களில் சக்திமயமாகவும் ஏழாவது சக்கரத்தில் ஒளிமயமாகவும் எட்டாவதாக அமிர்தம் பொழிகின்ற இடத்தில் பரஒளியாகவும், ஒன்பதாவதாக தலையைத் தாண்டிய துவாதசாந்த வெளியில் பரஒலியாகவும் இருக்கின்ற மூர்த்திகள் அனைவரும் பராபரை எனும் ஆதிமூலசக்தியின் திருவடிவங்களே ஆகும்.