பாடல் #672: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
மந்தர மேறு மதிபானு வைமாற்றிக்
கந்தாய்க் குழியிற் கசடற வல்லார்க்குத்
தந்தின்றி நற்காமிய லோகஞ் சார்வாகும்
அந்த வுலகம் அணிமாதி யாமே.
விளக்கம்:
மூலாதாரத்திலிருந்து குண்டலினி சக்தியை சுழுமுனை நாடி வழியே மேலே ஏற்றிச் செல்வதால் கிடைக்கும் சக்தியானது நமது சிற்றறிவை மாற்றி பேரறிவைக் கொடுக்கும். அதன்பின் அந்நாக்கில் அமுதம் ஊறியவுடன் தீமைகளை அகற்றி யோகத்திலிருக்க வல்லவர்களுக்கு அவர்கள் எந்த உலகத்திற்குச் சென்றாலும் அதைச் சார்ந்திருக்கக்கூடிய நல்ல உடம்பு கிடைக்கும். அவ்வாறு வெவ்வேறு உலகங்களுக்கு ஏற்ப உடலை மாற்ற முடிவதே அணிமா என்னும் சித்தியாகும்.
கருத்து: குண்டலினி சக்தியை சகஸ்ரதளத்திற்கு ஏற்றுபவர்களுக்கு எல்லா உலகத்தையும் சார்ந்திருக்கக்கூடிய உடல் என்னும் அணிமா சித்தி கிடைக்கும்.