பாடல் #669: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
எட்டா கியசித்தி யோரெட்டி யோகத்தாற்
கிட்டாப் பிராணனே செய்தாற் கிடைத்திடும்
ஒட்டா நடுநாடி மூலத்த னல்பானு
விட்டான் மதியுண்ண வும்வரு மேலதே.
விளக்கம்:
இயல்பாக எளிதில் அடங்காத மூச்சுக் காற்று அட்டாங்க யோகத்திலுள்ள பிராணாயாமத்தை முறைப்படி செய்வதன் மூலம் அடங்குவதோடு மட்டுமல்லாது எட்டுவிதமான சித்திகளும் கிடைப்பதற்கு வழிவகுக்கும். அதன் பின்னர் மூலாதாரத்திலிருக்கும் குண்டலினி சக்தி அக்கினிப் பிழம்பாய் கிளம்பி நடு நாடியாகிய சுழுமுனை வழியே மேலே சென்று சகஸ்ரதளத்தை அடைந்து பேரறிவாகிய இறைவனை உணரலாம்.
கருத்து: பேரறிவான இறைவனை உணர்வதற்கும் எட்டுவித சித்திகளை அடைவதற்கும் பிராணாயமம் உதவும்.