பாடல் #662: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)
கட்டிட்ட தாமரை நாளத்தில் ஒன்பது
மட்டிட்ட கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
தட்டிட்டு நின்று தளங்களி னூடுபோய்ப்
பொட்டிட்டு நின்றது பூரண மானதே.
விளக்கம்:
உடலிலுள்ள ஒன்பதுவித சக்திகளும் சகஸ்ரதளத் தாமரையின் தண்டாகிய சுழுமுனை வழியே குண்டலினி சக்தியோடு இணைந்து சென்று சகஸ்ரதளத்தை அடைந்து அங்கு இருக்கும் பராசக்தியோடு சேர்ந்து பூரண சக்தியாகி (முழுமையான சக்தியாகி) நிரந்தரமாக இருக்கும்.
ஒன்பது சக்திகள்:
- வாமை = ஊன்றல்
- ஜேஷ்டை = சுழித்தல்
- ரெளத்திரி = விசிரிம்பித்தல்
- காளி = மடித்து மேலேறல்
- கலவிகரணி = அங்கிருந்து கீழ்வரல்
- பலவிகரணை = மேல் புடை பெயர்த்தல்
- பலப்பிரமதனி = கீழ்த் தாழல்
- சர்வபூததமனி = கீழ் ஊன்றி நிற்றல்
- மனோன்மணி = வரி வடிவாதல்
கருத்து: குண்டலினியை சகஸ்ரதளத்தோடு சேர்ப்பவர்களுக்கு உடலிலுள்ள ஒன்பது சக்திகளும் பராசக்தியோடு இணைந்து நிரந்தரமாக இருக்கும்.