பாடல் #649

பாடல் #649: மூன்றாம் தந்திரம் – 11. அட்டமா சித்தி (தவத்தால் அடையக்கூடிய எட்டுவிதமான சித்திகள்)

தானே அணுவுஞ் சகத்துத்தன் நோன்மையும்
மானாக் கனமும் பரகாயத் தேகமுந்
தானாவ தும்பர காயஞ்சேர் தன்மையும்
ஆனாத வுண்மையும் வியாபியு மாம்எட்டே.

விளக்கம்:

தானே அணிமாவும் உலகமாகிய மகிமாவும் கனமுடையதாகிய கரிமாவும் எல்லவற்றிலும் அடங்கிய ஆகாயமாகிய லகிமாவும் அழியா உடலையடைதலாகிய பிரப்தியும் தானே ஆதலாகிய பரகாயத்தை அடையும் பிராகாமியமும் அமையாத உண்மையாகிய ஈசத்துவமும் வியாப்பியமாகிய வசித்துவமும் ஆகியவை அட்டமா சித்திகள் ஆகும்.

எட்டுவித சித்திகள்:

  1. அணிமா – அணுவைப் போல் உடலை சிறிதாக்கும் ஆற்றல்.
  2. மகிமா – மலையைப் போல் உடலை பெரிதாக்கும் ஆற்றல்.
  3. கரிமா – மலை போல எதனாலும் அசைக்க முடியாத அளவு உடலை கனமாக்கும் ஆற்றல்.
  4. இலகிமா – காற்றைப் போல் இலேசாய் உடலை மாற்றி எங்கும் செல்லும் ஆற்றல்.
  5. பிராப்தி – தூரத்திலிருப்பதையும் இருக்கும் இடத்திலேயே பார்க்கவும், மனதினால் நினைத்தவை யாவையும் அடையவும் பெறும் ஆற்றல்.
  6. பிராகாமியம் – எதையும் நினைத்தவுடன் அதாகவே தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல்.
  7. ஈசத்துவம் – ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களைத் தன் ஆளுகைக்குட்பட்டுச் செய்தல்.
  8. வசித்துவம் – ஈரேழு பதினான்கு உலகங்களிலும் கலந்து, அங்கிங்கெனாதபடி எங்கும் வியாபித்து இருக்கும் ஆற்றல்.

கருத்து: எட்டுவித சித்திகளாவன அணிமா, மகிமா, கரிமா, இலகிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம்.

5 thoughts on “பாடல் #649

    • Saravanan Thirumoolar Post authorReply

      பாடல் # 916 : நான்காம் தந்திரம் – 2. திருவம்பலச் சக்கரம் ( ஆனந்தக் கூத்தாடும் இறைவன் அருட்சக்தியோடு மந்திரவடிவாய் இருக்கும் எந்திரம்)

      அரகர என்ன அரியதொன் றில்லை
      அரகர என்ன அறிகிலர் மாந்தர்
      அரகர என்ன அமரரும் ஆவர்
      அரகர என்ன அறும்பிறப் பன்றே.

      விளக்கம் : அரகர என்பது சிவசிவ எனப் பொருள்படும் ஓரடுக்கு மொழியாகும், திருவம்பல சக்கரத்தின் மூலம் சிவசிவ மந்திரத்தை உணர்ந்தவர்களுக்கு அறிந்து கொள்வதற்கு வேறொன்றும் இல்லை, இந்த உண்மையை மக்கள் அறிந்து கொள்ளவில்லை, இதனை அறிந்தவர்கள் மரணமில்லாத அழியாத ஒளியுடலைப் பெறுவார்கள், அவர்களுக்கு வினைகள் அழிந்து பிறவிகள் இல்லை.

  1. அரவிந்தன் Reply

    ஐயா, சிவலோகம், சிவகணங்கள் என்றால் என்ன? சிவலோகம் அடைதல், முக்தி பெறுதல் இரண்டிற்கும் வேறுபாடு உண்டா??

    • Saravanan Thirumoolar Post authorReply

      சிவன் இருக்கும் இடம் சிவலோகம் ஆகும் அவர் இடும் கட்டளையை நிறைவேற்றுபவர்கள் சிவகணங்கள் ஆவார்கள். சிவலோகம் அடைதல், முக்தி பெறுதல் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. சிவலோகத்தை அடைந்தால் அங்கு மகிழ்ச்சியாக இறைவனுடன் இருக்கலாம். ஆனால் எப்பொழுதாவது ஆசைகள் மனதில் தோன்றினால் ஆசைப்பட்ட கர்மாவை தீர்க்க மீண்டும் பிறப்பெடுக்க வேண்டும். முக்தி என்பது யான் வேறு எனாதிருக்கும் நீ வேறு எனாதிருக்கும் பவதீதம் என்னும் நிலையாக இறைவனுடன் இரண்டறக்கலக்கும் நிலை அடைவது முக்தி ஆகும்.

      • அரவிந்தன் Reply

        மிக்க நன்றி ஐயா.
        ஓம் சிவாயநம

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.