18-9-2008 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கேள்வி: செல்வத்தை சேர்ப்பது தவறானதா?
சேர்ப்பது என்பது எப்பொழுதும் அளவிற்கு மீறியதையே குறிக்கின்றது. கலியுகத்தில் செல்வம் தேவையானது தான். இருப்பினும் நமது தேவைக்கு வேண்டுமானதை வைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக கையில் நிலைத்து விட்டால் புத்தி துர்புத்தியாக மாறுவது எளிதாகின்றது. அவ்விதம் அதிகம் நீயும் சம்பாதித்தால் நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும். உழைக்க வேண்டாம் பணம் சம்பாதிக்க வேண்டாம் என்று யாம் கூறவில்லை. தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு மற்றதை நல்காரியங்களுக்கு உபயோகிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும். இக்காலத்தில் பொறுப்புகள் அதிகமாகின்றது குடும்ப செலவுகள் பெரிதாகின்றது மேலும் தூரம் சென்று பணிபுரிய வாகனங்கள் தேவைப்படுகின்றது. இருக்க ஓர் இடம் தேவைப்படுகின்றது. இவையாவும் பூர்த்தி செய்த பின்பு சிறிது குழந்தைகளுக்கு எடுத்து வைப்பது உண்டு இதுவும் நியாயமானதே. இதற்கும் மேலாக சொத்துக்கள் சேகரித்து வைத்து நகைகள் வைத்து எப்பொழுது திருடன் வருவான் என பயம் கண்டு வாழ வேண்டாம். தேவைக்கு வேண்டியதை வைத்துக் கொள்ள வேண்டும் நல் காரியங்கள் செய்வதற்கு பல உண்டு இல்லாதோர் பலர் இருக்க குறிப்பாக தவிக்கும் முதியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் நலன் கொடுங்கள். மேலும் அன்னதானங்கள் இவையாவும் நலம் தருபவை என்கின்ற போதிலும் நிரந்தரமாக ஒருவருக்கு உண்ண வசதி செய்தால் அது மிகவும் சிறப்பாகின்றது. கல்வி தானம் ஒருவருக்கு தேவையான கல்விகள் பூர்த்தி செய்ய உதவினால் அதுவும் சிறப்பானது. நம் குழுந்தைகள் இருக்க ஒரிரு குழந்தைகளை படிக்க வைப்போம் உணவு நன்றாக உண்ண வைப்போம் என்கின்ற மனப்பான்மை வளர்த்தால் உம்மை உறுதியாக தெய்வம் வாழ்த்தும் தன் அருகில் சேர்க்கும்.