8-10-2006 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
கல்லது அசையும் நாராயனா
கல்லது பாவமும் காட்டுமது நாராயணா
கல்லென கண்டோர்க்கும் கல்லாம் நாராயணா
இங்கும் கல்லும் செப்புமே நாராயணா.
இப்பாடலுக்கான விளக்கம் என்ன?
அவரவர் ஆன்மீக நிலைகள் குறித்து மூர்த்திகளும் மூர்த்திகளின் அசைவும் காணக்கூடும். இது மனப்பிரமை என பலரும் எண்ணுவதுண்டு. அவ்விதம் இல்லை கல்லும் செப்பும் நாராயணா என்பது ஓசையாகவே காதில் விழும் என்பதில் எவ்வித அச்சமும் வேண்டாம். இது மட்டும் அல்லாது மானிடர் துயரம் கண்டு மூர்த்திகளின் கண்ணில் நீர் வருவதும் உண்டு. இக்காலத்தில் மனிதர்களுக்கு வரும் வேதனைகளுக்கு ஆனந்த பைரவரும், லிங்கமும் சீராக்கும். பலர் அகம்தனிலும் தெய்வங்கள் வந்து தட்டி எழுப்புவதும் கலியுகத்தில் ஓர் சாதாரண நிலையாகி விட்டது. இதை ஏன் செய்கின்றனர் என்றால் நம்பிக்கை ஊட்டுவதற்கே கலியில் தோன்றும் கடினங்கள் இருந்த போதிலும் யாமும் உன்னை காக்கின்றோம் எமது பக்கம் திரும்புங்கள் என்கின்றதை உணர்த்திடவே இருப்பினும் மானிடர்கள் பெரும்பாலும் பணத்தை நாடுகின்றனர். இறைவனை பார்ப்பதில்லை. லட்சுமி தேவியை செல்வம் வர வேண்டும் என்று வணங்குகின்றனரே தவிர ஓர் முக்தி நிலை வர வேண்டும் என வணங்குவதில்லை. எவ்வித தெய்வத்தை வணங்கிய போதிலும் எந்த நாமம் இட்டு வணங்கிய போதிலும் செல்வது ஓரிடத்திற்கே என்பதை மனதில் வைக்க வேண்டும். எந்த ரூபமாக இருந்த போதிலும் பெறுவது அப்பரம்பொருளே என்பதை மறக்காமல் செயல்பட நன்மை உண்டாகும். தேன் எவ்வித பாட்டிலிலும் ஜாடியிலும் கண்ணாடியில் இருந்த போதிலும் தேனின் தன்மை மாறுவதில்லை. இது போல் இறைவனின் தன்மையும் மாறுவதில்லை. நீங்கள் இந்த சக்தியை எந்த பெயரை கொண்டு அழைத்தாலும் அழைத்தவுடன் உங்களுக்கு நல்வழிகாட்ட அச்சக்தி நிற்கிறது. இறைவனும் நாமும் வேறில்லை என்கின்ற எண்ணம் வளர்த்து எமக்குள் இருக்கும் இறைவன் உமக்குள்ளும் இருக்கின்றான் என்ற அப்பெரும் வாக்கியத்தினை உணர்தல் வேண்டும். பல பல இன்னல்கள் தோன்றும் பல பல குறைகள் காணும் இவையாவும் நம் முன் வினைகள் தீரும் வழியாகின்றது என மனதில் நிறுத்தி இறைவன் பாதத்தை பிடித்த வண்ணமாகவே இருத்தல் வேண்டும். எக்காலத்திலும் அவன் பாதத்தை விடுவது சீராகாது. இந்நிலையில் எம்மை இவன் விட மாட்டான் போலிருக்கிறது என ஆண்டவனும் அவனுக்கு நல்வழி அளிப்பான்.