பாடல் #1648: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)
முன்னின் றருளு முடிக்கின்ற காலத்து
நண்ணின் றுலகில் நடுவுயிராய் நிற்கும்
பின்னின் றருளும் பிறவியை நீக்கிடு
முன்னின் றெனக்கொரு முத்திதந் தானே.
திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:
முனனின றருளு முடிககினற காலதது
நணணின றுலகில நடுவுயிராய நிறகும
பினனின றருளும பிறவியை நீககிடு
முனனின றெனககொரு முததிதந தானெ.
சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:
முன் நின்று அருளும் முடிக்கின்ற காலத்து
நல் நின்று உலகில் நடு உயிர் ஆய் நிற்கும்
பின் நின்று அருளும் பிறவியை நீக்கிடும்
உள் நின்று எனக்கு ஒரு முத்தி தந்தானே.
பதப்பொருள்:
முன் (ஆதியிலிருந்தே) நின்று (நின்று) அருளும் (அருளுகின்ற இறைவன்) முடிக்கின்ற (ஒருவருக்கு வினை முடிகின்ற) காலத்து (காலத்தில்)
நல் (நன்மையாக) நின்று (நின்று அருளுகின்றான்) உலகில் (உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கு) நடு (உள்ளே) உயிர் (உயிருக்கு உயிர்) ஆய் (ஆக) நிற்கும் (நிற்கின்றவனாகிய அவனே)
பின் (தமது அருளை வழங்கிய பின்பும்) நின்று (அடியவருடனே நின்று) அருளும் (அவர் எப்போதும் அருள் நிலையிலிருந்து விலகி விடாமல் பாதுகாத்து அருளுகின்றான்) பிறவியை (அந்த அருளினால் இனி வரக்கூடிய பிறவிகளையும்) நீக்கிடும் (நீக்கி விடுகின்றான்)
உள் (அத்தகைய இறைவன் எமக்கு உள்ளே) நின்று (நின்று) எனக்கு (எமக்கு) ஒரு (ஒரு பேரின்பமான) முத்தி (முக்தியை) தந்தானே (தந்து அருளினானே).
விளக்கம்:
ஆதியிலிருந்தே நின்று அருளுகின்ற இறைவன் ஒருவருக்கு வினை முடிகின்ற காலத்தில் நன்மையாக நின்று அருளுகின்றான். உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கு உள்ளே உயிருக்கு உயிராக நிற்கின்றவனாகிய அவனே தமது அருளை வழங்கிய பின்பும் அடியவருடனே நின்று அவர் எப்போதும் அருள் நிலையிலிருந்து விலகி விடாமல் பாதுகாத்து அருளுகின்றான். அந்த அருளினால் இனி வரக்கூடிய பிறவிகளையும் நீக்கி விடுகின்றான். அத்தகைய இறைவன் எமக்கு உள்ளே நின்று எமக்கு ஒரு பேரின்பமான முக்தியை தந்து அருளினானே.