பாடல் #1651

பாடல் #1651: ஆறாம் தந்திரம் – 7. அருளுடைமையின் ஞானம் வருதல் (இறை அருளின் மூலம் ஞானம் பெறுதல்)

காயத்தே ரேறி மனப்பாகன் கைகூட்ட
மாயத்தே ரேறி மயங்கு மவையுணர்
நேயத்தே ரேறி நிமலனருள் பெற்றா
லாயத்தே ரேறி யவனிவ னாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

காயததெ ரெறி மனபபாகன கைகூடட
மாயததெ ரெறி மயஙகு மவையுணர
நெயததெ ரெறி நிமலனருள பெறறா
லாயததெ ரெறி யவனிவ னாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

காயம் தேர் ஏறி மன பாகன் கை கூட்ட
மாயம் தேர் ஏறி மயங்கும் அவை உணர்
நேயம் தேர் ஏறி நிமலன் அருள் பெற்றால்
ஆயம் தேர் ஏறி அவன் இவன் ஆமே.

பதப்பொருள்:

காயம் (உயிர்கள் நிலையில்லாத தமது உடலை) தேர் (இறப்பு இல்லாத நிலை பெற்றதாகிய உயர்ந்த தேராக மாற்றி) ஏறி (அதில் ஏறி செல்வதற்கு) மன (மனமாகிய) பாகன் (பாகனின்) கை (கையில்) கூட்ட (ஐம் புலன்களும் அவன் வசப்படும் படி செய்தால்)
மாயம் (மாயையின் மயக்கத்திலிருந்து) தேர் (நீங்கி உண்மை அறிவாகிய தேரில்) ஏறி (ஏறி) மயங்கும் (மாயையினால் மயங்குகின்ற) அவை (மனதை) உணர் (மாற்றி உண்மையை உணர வைக்கலாம்)
நேயம் (அதன் பிறகு அன்பு என்கின்ற நிலையிலிருந்து) தேர் (பேரன்பாகவே மாறுகின்ற தேரில்) ஏறி (ஏறினால்) நிமலன் (ஒரு குற்றமும் இல்லாத இறைவனின்) அருள் (திருவருளை) பெற்றால் (பெற்று விடலாம்)
ஆயம் (அப்போது பொன்னாகவே மாறிவிட்ட) தேர் (தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில்) ஏறி (ஏறினால்) அவன் (இறைவனே) இவன் (தாம் எனும்) ஆமே (நிலையை அடையலாம்).

விளக்கம்:

உயிர்கள் நிலையில்லாத தமது உடலை இறப்பு இல்லாத நிலை பெற்றதாகிய உயர்ந்த தேராக மாற்றி அதில் ஏறி செல்வதற்கு மனமாகிய பாகனின் கையில் ஐம் புலன்களும் அவன் வசப்படும் படி செய்தால் மாயையின் மயக்கத்திலிருந்து நீங்கி உண்மை அறிவாகிய தேரில் ஏறி மாயையினால் மயங்குகின்ற மனதை மாற்றி உண்மையை உணர வைக்கலாம். அதன் பிறகு அன்பு என்கின்ற நிலையிலிருந்து பேரன்பாகவே மாறுகின்ற தேரில் ஏறினால் ஒரு குற்றமும் இல்லாத இறைவனின் திருவருளை பெற்று விடலாம். அப்போது பொன்னாகவே மாறிவிட்ட தங்களின் உடலாகிய பிரகாசமான தேரில் ஏறினால் இறைவனே தாம் எனும் நிலையை அடையலாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.