23-7-2011 அன்று நடந்த அஸ்வினி நட்சத்திர பூஜையில் குருநாதர் கூறிய கருத்துக்கள்:
ஆன்மீகம் என்கின்ற பாதையில் ஒருவன் செல்லும் போது முதன்மையில் பல பல ரூபங்கள் வழிபட்டும் மேல் செல்ல செல்ல எப்படி நம்மிடமுள்ள பழக்கங்கள் உதிருகின்றதோ அவ்விதம் ஒவ்வொரு ரூபமும் உதிர்ந்து விடும். முடிவில் ஓரிரு ரூபங்கள் இருக்கும் காலத்தில் இதனையும் தாண்டி செல்லுதல் வேண்டும் என எண்ணினால் மிகவும் ஓர் வெறுமை தோன்றும். இவ்விதம் வெறுமை தோன்றுவது சீரில்லை. ஏனெனில் சீராக சாதனைகள் செய்து கொண்டால் ரூபம் விட்டு அரூப நிலைக்கு செல்லும் போது ஆனந்தமே பெருகுதல் வேண்டும். அவ்விதம் ஆனந்தம் கிடைக்கவில்லை என்றால் இந்நிலைக்கு இன்னும் தகுதி பெறவில்லை என்றே பொருளாகும். இதனை மனதில் நிறுத்த வேண்டும். இந்நிலை அடைய முயற்சிகள் பெருக்கிடல் வேண்டும். ஏனெனில் நாம் பட்டப்படிப்புக்கு செல்லும் போது கீழ் வகுப்பு புத்தகங்களை உபயோகித்தலாகாது என்கின்ற விதியும் உண்டு. இத்தகைய நிலையில் மேல் நிலை அடையுங்கால் மீண்டும் எமக்கு விளையாட்டுத்தனமாக சாதனைகள் வேண்டும் என்பதே சரியில்லை. இது கடினமாக சொல்லவில்லை என்கின்ற போதிலும் இது ஆன்மீக பாதையில் செல்வோருக்கு ஓர் வழிகாட்டியாக இருக்கட்டும் என்றும் எண்ணிட்டோமே.