பாடல் #1583

பாடல் #1583: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தானந்தி நீர்மையுட் சந்தித்த சீர்வைத்த
கோனந்தி யெந்தை குறிப்பறி வாரில்லை
வானந்தி யென்றும் கீழுமொரு வர்க்குத்
தானந்தி யங்கித் தனிச்சுட ராமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தானநதி நீரமையுட சநதிதத சீரவைதத
கொனநதி யெநதை குறிபபறி வாரிலலை
வானநதி யெனறும கிழுமொரு வரககுத
தானநதி யஙகித தனிசசுட ராமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தான் நந்தி நீர்மை உள் சந்தித்த சீர் வைத்த
கோன் நந்தி எந்தை குறிப்பு அறிவார் இல்லை
வான் நந்தி என்றும் கீழும் ஒருவர்க்கு
தான் நந்தி அங்கி தனி சுடர் ஆமே.

பதப்பொருள்:

தான் (அடியவர் தாமே) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின்) நீர்மை (மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு) உள் (தமக்குள்) சந்தித்த (சந்தித்த இறைவன் தனது அருளால்) சீர் (சிறப்பாக) வைத்த (வைத்து அருளிய ஞானத்தின் மூலம்)
கோன் (வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும்) நந்தி (குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய) எந்தை (எமது தந்தையே) குறிப்பு (எனும் உண்மையை) அறிவார் (அறிந்து கொள்ளுகின்றவர்கள்) இல்லை (யாரும் இல்லை)
வான் (அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல) நந்தி (குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே) என்றும் (என்றும்) கீழும் (இந்த உலகத்திலும்) ஒருவர்க்கு (இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி)
தான் (தாமே) நந்தி (குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று) அங்கி (அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும்) தனி (தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும்) சுடர் (சுடர் ஒளியாகவும்) ஆமே (இருக்கின்றார்).

விளக்கம்:

அடியவர் தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் மழை போன்ற அளவில்லாத தன்மையில் அடியவரின் பாத்திரம் போன்ற பக்குவத்துக்கு ஏற்ற தன்மைகளை அடையும் பொருட்டு தமக்குள் சந்தித்த இறைவன் தனது அருளால் சிறப்பாக வைத்து அருளிய ஞானத்தின் மூலம் வழிகாட்டியும் தவறு செய்தால் தண்டிக்கும் தலைவனாகவும் குருவாகவும் இருக்கின்ற இறைவனாகிய எமது தந்தையே எனும் உண்மையை அறிந்து கொள்ளுகின்றவர்கள் யாரும் இல்லை. அவ்வாறு அறிந்து கொண்டவர்களுக்கு வானத்தில் இருந்து பொழியும் மழை போல குருவாக வீற்றிருந்து அனைவருக்கும் அருளும் இறைவனே என்றும் இந்த உலகத்திலும் இறைவனது உண்மை ஞானத்தை உணர்ந்த ஞானியாகிய ஒருவரின் பக்குவத்துக்கு ஏற்ற பாத்திரமாகி தாமே குருவாக இருக்கின்ற இறைவனின் நிலையில் நின்று அனைவருக்கும் நன்மை தரும் நெருப்பாகவும் தனக்கு சரிசமமாக வேறு எதுவும் இல்லாத தனிப் பெரும் சுடர் ஒளியாகவும் இருக்கின்றார்.

கருத்து:

குருவாக இருக்கின்ற இறைவன் மழை போல தனது அருளை வழங்கினாலும் இந்த உலகத்தில் இறைவனின் அருளை உணர்ந்த ஞானிகளின் பக்குவத்துக்கு ஏற்றபடி யார் ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களே அனைவருக்கும் நன்மை செய்யும் தனிப் பெரும் சுடரொளியாக திகழ்கின்றார்கள்.

பாடல் #1584

பாடல் #1584: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

திருவாகிச் சித்தியு முத்தியுஞ் சீர்மை
யருளா தருளு மயக்கறு வாய்மை
பொருளாய வேதாந்த போதமு நாத
னுருவருளா விடிலோர வொண் ணாதே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

திருவாகிச சிததியு முததியுஞ சீரமை
யருளா தருளு மயககறு வாயமை
பொருளாய வெதாநத பொதமு நாத
னுருவருளா விடிலொர வொண ணாதெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

திரு ஆகி சித்தியும் முத்தியும் சீர்மை
அருளாது அருளும் மயக்கம் அறு வாய்மை
பொருள் ஆய வேத அந்த போதமும் நாதன்
உரு அருளா விடில் ஒர ஒண்ணாதே.

பதப்பொருள்:

திரு (அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக) ஆகி (வீற்றிருந்து) சித்தியும் (அனைத்து சித்திகளையும் கொடுப்பதும்) முத்தியும் (முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும்) சீர்மை (உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும்)
அருளாது (வெளிப்புறத்திலிருந்த அருளாமல்) அருளும் (குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி) மயக்கம் (மாயையாகிய மயக்கத்தை) அறு (அறுப்பதும்) வாய்மை (உண்மை)
பொருள் (பொருளாக) ஆய (இருக்கின்ற) வேத (வேதத்தின்) அந்த (எல்லையாகிய) போதமும் (ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும்) நாதன் (இறைவனே)
உரு (சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து) அருளா (அருளாமல்) விடில் (போனால்) ஒர (அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து) ஒண்ணாதே (அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது).

விளக்கம்:

அடியவரின் உள்ளிருக்கும் ஜோதியே தெய்வமாக வீற்றிருந்து அனைத்து சித்திகளையும் கொடுப்பதும் முக்தியாகிய விடுதலையையும் கொடுப்பதும் உள்ளிருந்து வழிகாட்டி இறைவனை அடைவதற்கான வழியில் செல்ல வைப்பதும் வெளிப்புறத்திலிருந்த அருளாமல் குருவாக தமக்கு உள்ளிருந்தே அருளி மாயையாகிய மயக்கத்தை அறுப்பதும் உண்மை பொருளாகிய வேதத்தின் எல்லையாகிய ஞானத்தை கொடுப்பதும் ஆகிய இவை அனைத்தும் இறைவனே சிவகுருவாக அடியவரின் உள்ளுக்குள் இருந்து அருளாமல் போனால், அடியவரால் தாமாகவே எப்போதும் ஆராய்ந்து அறிந்து கொள்ளவோ அல்லது பெற்றுக் கொள்ளவோ முடியாது.

பாடல் #1585

பாடல் #1585: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பத்தியு ஞான வயிராக்க மும்பர
சித்திக்கு வித்தாஞ் சிவோகமே சேர்தலான்
முத்தியில் ஞான முளைத்தலா லம்முளை
சத்தி யருடரிற றானெளி தாமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பததியு ஞான வயிராகக முமபர
சிததிககு விததாஞ சிவோகமெ செரதலான
முததியில ஞான முளைததலா லமமுளை
சததி யருடரிற றானெளி தாமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பத்தியும் ஞான வயிராக்கமும் பர
சித்திக்கு வித்து ஆம் சிவ அகம் சேர்தல் ஆல்
முத்தியில் ஞானம் முளைத்தல் ஆல் அம் முளை
சத்தி அருள் தரில் தான் எளிது ஆமே.

பதப்பொருள்:

பத்தியும் (இறைவனிடம் மிகுந்த பக்தியும்) ஞான (அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில்) வயிராக்கமும் (மிகவும் உறுதியாக நிற்பதும்) பர (பரம் பொருளை)
சித்திக்கு (அடைவதற்கு) வித்து (விதையாக) ஆம் (இருக்கின்றது) சிவ (அதுவே சிவமே) அகம் (தாம் என்று உணர்ந்து) சேர்தல் (தமக்குள் இருக்கும் இறை சக்தியோடு ஒன்றாக சேர்வதை) ஆல் (செய்வதால்)
முத்தியில் (அதன் விளைவாக கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலை நிலைக்கு விதையாக இருந்து) ஞானம் (உண்மை அறிவான ஞானத்தையும்) முளைத்தல் (தமக்குள் முளைக்க வைக்கின்றது) ஆல் (ஆதலால்) அம் (அந்த ஞானத்தை) முளை (உருவாக வைப்பதற்கு)
சத்தி (தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது) அருள் (தனது அருளை) தரில் (கொடுத்தால்) தான் (தான்) எளிது (எளிமையாக) ஆமே (நடக்கும். இல்லாவிட்டால் கடினமே).

விளக்கம்:

இறைவனிடம் மிகுந்த பக்தியும் அவனை அடைய வேண்டும் என்ற ஞானத்தில் மிகவும் உறுதியாக நிற்பதும் பரம் பொருளை அடைவதற்கு விதையாக இருக்கின்றது. இந்த விதையானது தமக்குள் இருக்கின்ற சிவமே தாம் என்பதை உணர்ந்து அந்த இறை சக்தியோடு ஒன்றாக சேர்ந்து இருப்பதால் தான் கிடைக்கின்றது. இந்த நிலையில் இருக்கும் போது கிடைக்கின்ற முக்தி எனும் விடுதலையில் உண்மை அறிவான ஞானத்தை இந்த விதையே தமக்குள் முளைக்க வைக்கின்றது. ஆனால் இந்த ஞானத்தை முளைக்க வைப்பதற்கு தமக்குள் இருக்கின்ற இறை சக்தியானது தனது அருளை கொடுத்தால் தான் எளிமையாக நடக்கும். இல்லாவிட்டால் கடினமே.

பாடல் #1586

பாடல் #1586: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

பின்னெய்த வைத்ததோ ரின்பப் பிறப்பினை
முன்னெய்த வைத்த முதல்வனே யெம்மிறை
தன்னெய்துங் காலத்துத் தானே வெளிப்படு
மன்னெய்த வைத்த மனமது தானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

பினனெயத வைதததொ ரினபப பிறபபினை
முனனெயத வைதத முதலவனெ யெமமிறை
தனனெயதுங காலததுத தானெ வெளிபபடு
மனனெயத வைதத மனமது தானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

பின் எய்த வைத்தது ஓர் இன்ப பிறப்பினை
முன் எய்த வைத்த முதல்வனே எம் இறை
தன் எய்தும் காலத்து தானே வெளிப்படும்
மன் எய்த வைத்த மனம் அது தானே.

பதப்பொருள்:

பின் (அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில்) எய்த (அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி) வைத்தது (வைத்து அருளிய) ஓர் (ஒரு இறை சக்தியானது) இன்ப (இன்பத்தை அனுபவிக்கின்ற) பிறப்பினை (பிறவியை இந்த பிறவியிலேயே கொடுத்து அருளுவதும்)
முன் (இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே) எய்த (இந்தப் பிறவியில் அந்த நிலையை அடையும் படி) வைத்த (வைத்து அருளியதும்) முதல்வனே (அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற) எம் (எமது) இறை (இறைவனே ஆகும்)
தன் (அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும்) எய்தும் (அடையும்) காலத்து (காலத்தில்) தானே (இறைவன் தாமே) வெளிப்படும் (அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு)
மன் (என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு) எய்த (இருக்கின்ற நிலையை அடையும் படி) வைத்த (வைத்து அருளிய) மனம் (மனமாகவும்) அது (அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்ட அந்த இறை சக்தியே) தானே (இருக்கின்றது).

விளக்கம்:

அடியவர்கள் தாங்கள் செய்கின்ற சாதகங்களால் பெற்ற புண்ணியத்தின் பயனால் பிறகு எடுக்கின்ற ஏதோ ஒரு பிறவியில் அடையக் கூடிய துன்பமில்லாத இன்பமான பிறவியை இந்த பிறவியிலேயே அடையும் படி கொடுத்து அருளுவதும் இந்த பிறவியை எடுப்பதற்கு முன்பே அந்த நிலையை அடையும் படி வைத்து அருளியதும் அனைத்திற்கும் முதல்வனாக இருக்கின்ற எமது இறைவனே ஆகும். அந்த இன்பமான பிறவியிலும் ஆசைகளின் மேல் செல்லாமல் இறைவன் மேல் எண்ணம் வைக்கின்ற நிலையை அடியவர் தாமும் அடையும் காலத்தில் இறைவன் தாமே அடியவருக்குள்ளிருந்து வெளிப்பட்டு என்றும் அவனை விட்டு நீங்காமல் உறுதியாக அவனையே பற்றிக் கொண்டு இருக்கின்ற உறுதியான மன வலிமையை அடையும் படி செய்து அருளுகின்றார்.

பாடல் #1587

பாடல் #1587: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

சிவமான ஞானந் தெளியவொண் சித்தி
சிவமான ஞானந் தெளியவு முத்தி
சிவமான ஞானஞ் சிவபர தேகுஞ்
சிவமான ஞானஞ் சிவானந்த நல்குமே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

சிவமான ஞானந தெளியவொண சிததி
சிவமான ஞானந தெளியவு முததி
சிவமான ஞானஞ சிவபர தெகுஞ
சிவமான ஞானஞ சிவானநத நலகுமெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

சிவம் ஆன ஞானம் தெளிய ஒண் சித்தி
சிவம் ஆன ஞானம் தெளியவும் முத்தி
சிவம் ஆன ஞானம் சிவ பரத்து ஏகும்
சிவம் ஆன ஞானம் சிவ ஆனந்தம் நல்குமே.

பதப்பொருள்:

சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) தெளிய (அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று) ஒண் (அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது) சித்தி (அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) தெளியவும் (அவரது மனம் தெளியும் போதே) முத்தி (அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானத்தினால்) சிவ (சிவத்தின்) பரத்து (பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில்) ஏகும் (தாமும் சென்று அடைகின்ற நிலையை அடியவர் பெற்று விடுவார்)
சிவம் (சிவமாகவே) ஆன (ஆகிவிட்ட) ஞானம் (பேரறிவு ஞானமே) சிவ (சிவத்தின்) ஆனந்தம் (பேரானந்த நிலையையும்) நல்குமே (அடியவருக்கு கொடுக்கும்).

விளக்கம்:

சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானத்தினால் அடியவரின் மனமும் முழுமையாக தெளிவு பெற்று அவரது மனம் இறைவனோடு ஒன்றி இருக்கும் போது அனைத்து விதமான சித்திகளையும் பெற்று விடுவார். அப்படி அவரது மனம் தெளியும் போதே அடியவர் விடுதலை எனும் முக்தி நிலையையும் பெற்று விடுவார். அப்போது சிவத்தின் பரம்பொருள் இருக்கின்ற பரவெளியில் தாமும் சென்று அடைகின்ற நிலையையும் அடியவர் பெற்று விடுவார். அதன் பிறகு சிவமாகவே ஆகிவிட்ட பேரறிவு ஞானமே சிவத்தின் பேரானந்த நிலையையும் அடியவருக்கு கொடுக்கும்.

பாடல் #1588

பாடல் #1588: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

அறிந்துணர்ந் தேனிவ் வகலிட முற்றுஞ்
செறிந்துணர்ந் தோதித் திருவருள் பெற்றேன்
மறந்தொழிந் தேன்மதி மானிடர் வாழ்க்கை
பிறந்தொழிந் தேனிப் பிறவியை நானே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

அறிநதுணரந தெனிவ வகலிட முறறுஞ
செறிநதுணரந தொதித திருவருள பெறறென
மறநதொழிந தெனமதி மானிடர வாழககை
பிறிநதொழிந தெனிப பிறவியை நானெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

அறிந்து உணர்ந்தேன் இவ் அகல் இடம் முற்றும்
செறிந்து உணர்ந்து ஓதி திரு அருள் பெற்றேன்
மறந்து ஒழிந்தேன் மதி மானிடர் வாழ்க்கை
பிறிந்து ஒழிந்தேன் இப் பிறவியை நானே.

பதப்பொருள்:

அறிந்து (முழுமையாக அறிந்து) உணர்ந்தேன் (உணர்ந்து கொண்டேன்) இவ் (இந்த) அகல் (பரந்து விரிந்து இருக்கின்ற) இடம் (உலகம்) முற்றும் (முழுவதும் உள்ள பொருள்களை)
செறிந்து (அந்த அனைத்திற்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை) உணர்ந்து (உணர்ந்து கொண்டு) ஓதி (அந்த இறைவனை ஓதி) திரு (திரு) அருள் (அருளையும்) பெற்றேன் (பெற்றுக் கொண்டேன்)
மறந்து (மறந்து) ஒழிந்தேன் (ஒழித்து விட்டேன்) மதி (தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற) மானிடர் (பிற மனிதர்களின்) வாழ்க்கை (வாழ்க்கையை)
பிறிந்து (அவர்களை விட்டு பிரிந்து) ஒழிந்தேன் (உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டேன்) இப் (இந்த) பிறவியை (பிறவியையும்) நானே (யானே).

விளக்கம்:

இந்த பரந்து விரிந்து இருக்கின்ற உலகம் முழுவதும் உள்ள பொருள்களை முழுமையாக அறிந்து உணர்ந்து கொண்டேன். அந்த அனைத்து பொருளுக்குள்ளும் சிறப்பாக விளங்குகின்ற உண்மை பொருளான இறைவனை உணர்ந்து கொண்டு அந்த இறைவனை ஓதி திரு அருளையும் பெற்றுக் கொண்டேன். பிற மனிதர்களின் வாழ்க்கையை தன்னுடைய வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்து நடக்கின்ற தன்மையை மறந்து ஒழித்து விட்டேன். அவர்களை விட்டு பிரிந்து உலகப் பற்றுக்களை எல்லாம் ஒழித்து விட்டு இந்த பிறவியையும் நீங்கி விட்டேன்.

பாடல் #1589

பாடல் #1589: ஆறாம் தந்திரம் – 1. சிவகுரு தரிசனம் (இறைவனே குருவாக வந்து தரிசனம் தருவது)

தரிக்கின்ற பல்லுயிர்க் கெல்லாந் தலைவ
னிருக்கின்ற தன்மையை யேது முணரார்
பிரிக்கின்ற விந்தப் பிணக்கறுத் தெல்லாங்
கரிக்கொன்ற வீசனைக் கண்டுகொண் டேனே.

திருமந்திர ஓலைச் சுவடி எழுத்துக்கள்:

தரிககினற பலலுயிரக கெலலாந தலைவ
னிருககினற தனமையை யெது முணரார
பிரிககினற விநதப பிணககறுத தெலலாங
கரிககொனற வீசனைக கணடுகொண டெனெ.

சுவடி எழுத்துக்களை பதம் பிரித்தது:

தரிக்கின்ற பல் உயிர்க்கு எல்லாம் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்த பிணக்கு அறுத்து எல்லாம்
கரி கொன்ற ஈசனை கண்டு கொண்டேனே.

பதப்பொருள்:

தரிக்கின்ற (வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற) பல் (பல விதமான) உயிர்க்கு (உயிர்கள்) எல்லாம் (எல்லாவற்றுக்கும்) தலைவன் (தலைவனாகிய இறைவன்)
இருக்கின்ற (அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற) தன்மையை (தன்மையை) ஏதும் (சிறிது அளவும்) உணரார் (உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள்)
பிரிக்கின்ற (இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற) இந்த (இந்த) பிணக்கு (உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை) அறுத்து (அறுத்து) எல்லாம் (அனைத்தையும் நீக்கி)
கரி (தான் எனும் அகங்காரத்தை) கொன்ற (கொன்று) ஈசனை (தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும்) கண்டு (யான் கண்டு) கொண்டேனே (கொண்டேனே).

விளக்கம்:

வினைகளை தீர்ப்பதற்காக உடலை எடுத்து வருகின்ற பல விதமான உயிர்கள் எல்லாவற்றுக்கும் தலைவனாகிய இறைவன் அந்த உயிர்களுக்குள்ளேயே மறைந்து இருக்கின்ற தன்மையை சிறிது அளவும் உணராமல் இருக்கின்றார்கள் உலகத்தவர்கள். இறைவனையும் ஆன்மாவையும் மாயையால் பிரித்து வைத்து இருக்கின்ற இந்த உலகப் பற்றுக்கள், ஆசைகள், பாசம் எனும் தளைகளை எல்லாம் அறுத்து விட்டு தான் எனும் அகங்காரத்தை கொன்று தனக்குள் இருப்பது ஈசனே என்பதையும் அவனே அனைத்திற்கும் தலைவனாகவும் இருக்கின்றான் என்பதையும் யான் கண்டு கொண்டேனே.